இந்தியா

வயநாடு நிலச்சரிவு: தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு- அவசர உதவி எண்ணை அறிவித்த தமிழக அரசு

Published On 2024-07-30 10:47 GMT   |   Update On 2024-07-30 11:17 GMT
  • 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்,

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காளிதாஸ், கல்யாண குமார் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கேரளா வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக அரசு சார்பில் 1070 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுவரை உதவிக்கோரி எந்த அழைப்பும் வரவில்லை என்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News