இந்தியா

மகாராஷ்டிரா தேர்தலை தாமதிப்பது ஏன்? தேர்தல் ஆணையம் சொல்லும் காரணம்.. இந்தியா கூட்டணி அடம்!

Published On 2024-08-17 09:10 GMT   |   Update On 2024-08-17 09:17 GMT
  • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது
  • காஷ்மீரில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்

சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிப்பு 

அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் விரைவில் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில். சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகள் அறவிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 ,அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று அறிவித்திருந்தார். கடந்த முறை அரியானாவிற்கும் மகாராஷ்டிராவிற்கும் ஒரே சமயத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் நிலையில் இந்த வருடம் மகாராஷ்டிர தேர்தல் தாமதமாகியுள்ளது. நவம்பர் மாதமே அங்கு தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. இது அரசியல் களத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தலுக்கு என்னதான் ஆச்சு? - ஆணையம் சொல்வது என்ன? 

'சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளதாலும் , அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளதாலும் மகாராஷ்டிராவில் அதே நேரத்தில் கவனம் செலுத்த முடியாது. கடந்த முறை நிலைமை வேறு. அப்போது காஷ்மீர் தேர்தல் நடக்கவில்லை. ஆனால் இப்போது காஷ்மீருக்கு அதிக பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள். அது மட்டுமின்றி தற்போது மகாராஷ்டிராவில் கனமழை காலமாக உள்ளது. [விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி] என வரிசையாக விழாக்களும் வர உள்ளது. எனவேதான் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் தாமதமாகிறது' என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

அரசியலாகும் தேர்தல் தாமதம் 

ஆனால் இந்தியா கூட்டணி மகா விகாஸ் தலைவர்கள் இந்த தாமதத்தைச் சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனா அணியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தேர்தல் ஆணையம் பாஜவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது. சட்டவிரோத பாஜக அரசு மனசாட்சியின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கான்டிராக்டர்கள் மூலம் மாநிலத்தை பாஜக கூட்டணி இன்னும் கொஞ்சம் கொள்ளையடிக்கத் தேர்தல் ஆணையம் வழி செய்து கொடுத்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்காமல் இருப்பதற்கு இன்னும் தேர்தல் ஆணையத்தின் எஜமான் பாஜக தலைமையிலிருந்து உத்தரவு வரததே காரணம். தேர்தல் தாமதத்துக்கு காஷ்மீரை காரணமாக கூறுகின்றனர். எனவே சமீப காலமாக அங்கு அதிகரிக்கத்தொடங்கியுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடுமையாக சாடியுள்ளார். 

Tags:    

Similar News