கார்கேவின் கிராமத்தை எரித்து தாயையும் சகோதரியையும் கொன்றவர்கள் யார்?.. யோகி ஆதித்யநாத் பாய்ச்சல்
- நீங்கள் யோகியாக விரும்பினால் ‘கெருவா’ அணிந்து அரசியலில் இருந்து விலகி இருங்கள்
- ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர்கள் படை உங்கள் கிராமத்தை எரித்தார்கள், இந்துக்களை கொன்றார்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக [ மகாயுதி] கூட்டணிக்கும் காங்கிரசின் மகா விகாஸ் அகாதி இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பு தேசிய தலைவர்களும் மகாராஷ்டிராவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணிக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து விமர்சித்துள்ளார்.
[இந்துக்கள்] சேர்த்திருந்தால் பாதுகாப்பு , தனித்தனியாக இருந்தால் வெட்டப்படுவார்கள் என்ற பதேங்கே தோ கதேங்கே என்ற கோஷத்தை எழுப்புபவர் ஒரு உண்மையான யோகியாக இருக்க முடியாது, நீங்கள் யோகியாக விரும்பினால் 'கெருவா' அணிந்து அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கார்கே ஆதித்யநாத்தை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் அச்சல்பூர் [Achalpur] பகுதியில் பிரசாரம் செய்த அவர், நான் ஒரு யோகி, என்னைப் பொறுத்தவரை, தேசம் முதன்மையானது. ஆனால், மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சமாதான அரசியலே முதன்மையானது. கார்கே ஜி என் மீது கோபப்படாதீர்கள், நீங்கள் கோபப்பட வேண்டும் என்றாலே ஐதராபாத் நிஜாம் மீது கோபப்படுங்கள்.
ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர்கள் படை உங்கள் கிராமத்தை எரித்தார்கள், இந்துக்களை கொன்றார்கள். உங்கள் மதிப்பிற்குரிய தாய், சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களை எரித்தார்கள். இந்த உண்மையை நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் என்று பேசினார்.மேலும் இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெற முடியாது என்பதற்காக கார்கே இந்த உண்மையை ஏற்க மறுக்கிறார் என்றும் யோகி தெரிவித்தார்.
முன்னதாக சுதந்திரத்திற்குப் பிறகு நிஜாம் ஆட்சி நடந்து வந்த ஐதராபாத் இந்தியாவுடன் இணைய மறுத்தது. அப்போது இந்திய ராணுவத்துக்கும் நிஜாமின் ரசாகர்கள் படைக்கும் இடையே மோதல் நடந்தது. கார்கே தற்போது கர்நாடகாவில் கார்கேவின் சொந்த கிராமம் இருக்கும் பிடார் பகுதி அந்த சமயம் ஐதராபாத் நிஜாம் ஆளுகையின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.