கலெக்டர் பதவியை உதறிவிட்டு துறவியாகும் அரசு அதிகாரி
- கடந்த 2011-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா தாசில்தாராக பணியாற்றினார்.
- 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த அவர் தற்போது கூடுதல் கலெக்டராக உள்ள நிலையில், துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அரசு வேலை என்பது படித்தவர்களிடம் பெரிய கனவாகவே இருந்து வருகிறது. அப்படி இருக்க கிடைத்த வேலையை அதுவும் கலெக்டர் வேலையை ஒருவர் உதறிவிட்டு துறவியாகியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி அரசு பதவியை துறந்து செல்ல இருப்பவர் நாகராஜ். கர்நாடக அரசு அதிகாரியான இவர் தற்போது மண்டியா மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா தாசில்தாராக பணியாற்றினார். அந்த சமயத்திலேயே அவர் நாகமங்களாவில் உள்ள புகழ்பெற்ற ஆதிசுஞ்சனகிரி மடத்தில் துறவறம் மேற்கொள்ள தீட்சை பெற்றார். இதனால் அவருக்கு நிஷ்சலானந்தநாத் சுவாமிஜி என பெயர் சூட்டப்பட்டது.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி, சாமியாராக போக நினைத்த முடிவை கைவிட வைத்தனர். இருப்பினும் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என வேட்கை மட்டும் அவருக்கு குறைந்தபாடில்லை. அதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த அவர் தற்போது கூடுதல் கலெக்டராக உள்ள நிலையில், துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் தனது கூடுதல் கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சாமியாராக மாற உள்ளார். இவர் ஒக்கலிக மகா சமஸ்தான மடத்தின் மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமியின் சீடர் ஆவார்.
துமகூரு மாவட்டத்தில் உள்ள ஒன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர். நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பாலகங்காதர்நாத் சுவாமியிடம் கல்வி பயின்றார். இதனால் அவருக்கு ஆன்மிகம் மீது அதிக நாட்டம் ஏற்பட காரணமாகிவிட்டது.
முதலில் கோர்ட்டில் எழுத்தராக பணியாற்றிய அவர் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, ஹாசன், கே.ஆர்.பேட்டை, நாகமங்களா பகுதிகளில் தாசில்தாராக பணியாற்றி வந்துள்ளார். மக்கள் மத்தியில் நேர்மையான, திறமையான அதிகாரி என்ற பெயரும் நாகராஜுக்கு உள்ளது. இந்த நிலையில் அவர் அரசு பதவியை உதறிதள்ளிவிட்டு துறவறம் செல்ல இருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தை பொறுத்தவரை கர்நாடக அரசு அதிகாரி ஒருவருக்கு அடிப்படை சம்பளம் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் ஆகும். இதர படிகள் சேர்த்து மொத்தம் ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை ஒரு அதிகாரிக்கு சம்பளம் கிடைக்கும். அதன்படி நாகராஜ் சுமார் ரூ.2¼ லட்சம் ஊதியத்தை உதறிவிட்டு சாமியாராக செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.