பிரதமர் மோடி, அமித் ஷாவை இரவு நேரத்தில் ஏன் சந்திக்க வேண்டும்?- குலாம் நபி ஆசாத்திற்கு பரூக் அப்துல்லா பதில்
- பிரதமர் மோடி, அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு.
- தேவைப்பட்டால் பகலில் சந்திப்பேன். ஏன் இரவில் சந்திக்க வேண்டும்? என பரூப் அப்துல்லா பதிலடி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ள குலாம் நபி ஆசாத், கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா இரவு நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதற்கு பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார். குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டுக்கு பரூக் அப்துல்லா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
நான் பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்றால், பகல் நேரத்தில் அவர்களை சந்திப்பேன். நான் அவர்களை ஏன் இரவு நேரத்தில் சந்திக்க வேண்டும். பரூப் அப்துல்லா பற்றி அவதூறாக நினைப்பது என்ன காரணம்?. யாரும் அவருக்கு மாநிலங்களை சீட் வழங்காதபோது, நான் அவருக்கு மாநிலங்களை சீட் கொடுத்தேன். ஆனால் இன்று அவர் இதையெல்லாம் பேசுகிறார்.
அவர்கள் எனது இமேஜை கேவலப்படுத்தவும், ஒவ்வொரு விஷயத்திலும் எனது பெயரை இழுக்கவும் விரும்புகிறார்கள். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி வீட்டில் அமர்ந்திருக்கும் தங்களது முகவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும். அவர் மக்களுக்கு உண்மையைப் புரியும்படி சொல்ல வேண்டும்" என்றார்.