காதலனை 10 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்
- கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சன்ஹகி பால் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்தார்.
இந்த நிலையில் அவருக்கு சமூகவலைதளம் மூலம் சந்தக் தாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் கொல்கத்தா டம் டம் மதுகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.
சம்பவத்தன்று சந்தக்தாஸ் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க சென்றார். பின்னர் அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் சன்ஹகி பாலுக்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சன்ஹகி பால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சந்தக் தாசை குத்தினார். ஆத்திரம் தீரும் வரை 10 தடவை அவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சந்தக் தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து அவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தபோது அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.
கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சந்தக் தாஸ் தனது காதலி சன்ஹகி பால் மற்றும் அவரது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் குடும்பம் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் 3 பேரும் சிரித்த முகத்துடன் இருந்தனர்.
சன்ஹகிபால் மாடர்ன் உடை அணிந்து இருந்தார்.
காதலனை கொன்று ஜெயிலுக்கு சென்றதால் அவரது மகனை போலீசார் தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.