இந்தியா

'ராஜ் பவன் செல்லவே பெண்களுக்கு பயம்' - மம்தா மீது மேற்குவங்க ஆளுநர் அவதூறு வழக்கு

Published On 2024-06-29 03:14 GMT   |   Update On 2024-06-29 03:14 GMT
  • ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
  • நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

 திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்க வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் மெல்ல புகைந்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார். மேலும் ஆளுநர் மீதான குற்றச்சாட்டு குறித்து திரிணாமுல் கட்சித் தலைவர்களும் பலமுறை பொதுவெளியில் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில்தான் ஆளுநர் ஆனந்தா போஸ் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக பார்க்கமுடிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவைப் போல் மேற்கு வங்கத்திலும் ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் சமீப காலங்களாக மோதல் போக்கு  நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News