நான் துறவியல்ல, சாதாரண பெண் தான்.. ஆடம்பர 'பேக்' சர்ச்சைக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் பதில்
- ரூ 2 லட்சம் மதிப்புள்ள பையை பெண் ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெய கிஷோரி வைத்திருந்தது சர்ச்சையானது.
- கிருஷ்ணர் கூட அர்ஜுனிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சந்நியாசி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை.
29 வயதான பெண் ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெய கிஷோரி விமான நிலையத்தில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் வைத்திருக்கும் ஒரு பையின் விலை 2 லட்சம் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
உலகப் பற்றுகளைத் துறக்க வேண்டும், தோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று சொற்பொழிவாற்றும் ஜெய கிஷோரி, தோல் பொருட்களால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பையை பயன்படுத்தியுள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர்.
நெட்டிசன்களின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த ஜெய கிஷோரி, "நான் ஒன்றும் துறவி இல்லை நானும் மற்றவர்களைப் போல சாதாரணமான நபர் தான். நான் ஒரு சாதாரண பெண், நான் ஒரு சாதாரண வீட்டில் வாழ்கிறேன், நான் என் குடும்பத்துடன் வாழ்கிறேன்.. நான் இளைஞர்களிடம் இதையே சொல்கிறேன், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை நல்வழிப்படுத்துங்கள் மற்றும் உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள்
நான் பயன்படுத்திய பை தோல் பொருட்களால் செய்யப்பட்டது இல்லை. உலக ஆசையை கைவிடும்படி நான் ஒருபோதும் மக்களிடம் கூறவில்லை. பகவான் கிருஷ்ணர் கூட அர்ஜுனிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சந்நியாசி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் உங்கள் 'கர்மாவை' தொடர்ந்து செய்யும்படி சொல்கிறார்..
ஆன்மிகம் என்பது உங்களுக்கு எதுவும் சொந்தமில்லை என்று அர்த்தமல்ல. எதுவுமே உங்களுக்கு சொந்தமில்லை என்பதே இதன் உண்மையான அர்த்தம். உங்கள் மீதும் உங்கள் மனம் மீதும் எதற்கும் அதிகாரம் இல்லை. அதுதான் உண்மையான ஆன்மீகம்" என்று தெரிவித்தார்.