இந்தியா

கேரளாவில் நிபா வைரசுக்கு வாலிபர் பலி: தொடர்பு பட்டியல் 266 ஆக உயர்வு

Published On 2024-09-19 04:08 GMT   |   Update On 2024-09-19 04:08 GMT
  • மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொண்டது.
  • தொற்று பாதிப்பு குறித்து கண்டறிவதற்காக சுகாதாரத் துறையினரின் கள ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் திடீரென இறந்து விட்டார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொண்டது. அங்கு பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

அதே நேரத்தில் நிபா வைரஸ் பாதித்து பலியான வாலிபரின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயாரித்தனர். அவர் தங்கியிருந்த பகுதி, சென்றுவந்த இடங்கள், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது உடனிருந்த ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

தொடர்பு பட்டியலில் உள்ள தொற்று பாதித்தவரின் தாய், சிகிச்சை அளித்த மருத்துவர், நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட 26 பேருக்கு பரிசோதனை முடிவு 'நெகட்டிவ்' என்றே வந்திருக்கிறது. இது சுகாதாரத்துறையினருக்கு நிம்மதியை தந்திருக்கிறது.

இந்நிலையில் தொற்று பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது தொடர்பு பட்டியலில் 266 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 81 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர்.

தொடர்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 176 பேர் முதன்மை தொடர்பு பட்டியலிலும், 90 பேர் இரண்டாம் நிலை தொடர்பு பட்டியலிலும் இருக்கின்றனர். முதன்மை தொடர்பு பட்டியிலில் இடம்பெற்றுள்ளவர்களில் 133 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் அனைவரின் உடல்நிலையையும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நிபா அறிகுறி உள்ளவர்களாக கருதப்படும் 21 பேர் பெருந்தல்மன்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 6 பேர் மஞ்சேரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தொற்று பாதிப்பு குறித்து கண்டறிவதற்காக சுகாதாரத் துறையினரின் கள ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. மாம்பாடு, திருவாலி, வண்டூர் ஆகிய ஊராட்சிகளில் நேற்று 1,044 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 8 ஆயிரம் வீடுகளில் தொற்று பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News