இந்தியா (National)

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: பிரதமர் மோடி

Published On 2024-08-25 08:39 GMT   |   Update On 2024-08-25 08:39 GMT
  • விண்வெளித் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது.
  • பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று தனது 113-வது உரையில் பிரதமர் கூறியதாவது:

விண்வெளித் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. 21-ம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க, பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

உதாரணமாக, ஆகஸ்ட் 23-ம் தேதி நாட்டு மக்கள் முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினர். இது மீண்டும் சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாட வழிவகுக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தெற்குப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்தை சிவசக்தி என பெயரிட்டு அழைக்கிறோம். இந்த சாதனையை படைத்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். வீரர்களுக்கு பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினேன். என்னுடைய இந்தக் கருத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது அரசியலில் நுழைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் எனக்கு பலவிதமான ஆலோசனைகளை அனுப்பியுள்ளனர்.

சிலர் தங்கள் தாத்தா அல்லது பெற்றோரிடம் அரசியல் பாரம்பரியம் இல்லாததால் அவர்களால் அரசியலுக்கு வர முடியவில்லை. வம்ச அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களும் அரசியலில் முன்னேற முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் அனுபவமும், ஆர்வமும் நாட்டுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அரசியலில் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இளம் தொழில்முனைவோரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News