திருப்பதி கோவிலுக்கு 1 கோடி "கோவிந்தா" நாமம் எழுதி சென்றால் வி.ஐ.பி. தரிசனம்
- எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வருகிறது.
திருப்பதி:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடந்தது.
சனாதன தர்மத்தை இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஊக்குவிக்கும் விதமாக தேவஸ்தானம் சில முக்கிய தீர்மானங்களை இந்த கூட்டத்தில் எடுத்துள்ளது. எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதுவது போன்று "கோவிந்தா" நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதே போல 10 லட்சத்து 1,116 முறை கோவிந்தா நாமத்தை எழுதி வருபவர்களுக்கு ஒருவருக்கு மட்டும் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வருகிறது.
கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் அதிகநேரம் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரமோற்சவ விழாவில் வாகன சேவைகள் மிக சிறப்பாக நடத்தப்படும்.
திருப்பதியில் 1952-ம் ஆண்டு பக்தர்களுக்காக கட்டப்பட்ட பழமையான சத்திரங்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் ரூ.600 கோடியில் அதிநவீன வசதியுடன் 20,000 பக்தர்கள் தங்கும் வசதியுடன் அச்சுதம் ஸ்ரீபாதம் என இரண்டு ஓய்வறைகள் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.