பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி-குடும்பத்தினருக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
- மகாராஷ்டிர அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தல்களையும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.
- இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது.
உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் வி.ஐ.பி.கள், வி.வி.ஐ.பி.கள், விளையாட்டு துறை, பொழுது போக்குதுறை பிரபலங்கள் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தரப்பில் தனது குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், நாட்டுக்கு நிதி ரீதியாக சீர்குலைப்பு ஏற்படுத்தும் விதமாக தங்களுக்கு தொடர் ஆபத்துகள் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை மனு வைக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, அசானுதின் அமனுல்லா ஆகியோர் அமர்வு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டுக்கு பயணம் செய்யும்போதும் இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தல்களையும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.
அதில், அச்சுறுத்தல்கள் இருப்பதாக உணர்ந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும், பாதுகாப்பு குறைவாக இருப்பதாக உணர்பவர்களை எந்த ஒரு இடத்திலும், பகுதியில் தங்க வைக்க வேண்டும் என கட்டுப்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.
55 பாதுகாவலர்கள், 10-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.