புதுச்சேரி

பாஜக அரசின் லேட்டரல் என்ட்ரி முறைக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு

Published On 2024-08-19 14:58 GMT   |   Update On 2024-08-19 14:58 GMT
  • அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது.

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நானும், என் கட்சியும் உறுதியாக உள்ளோம். லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது. இதில் எங்கள் கட்சி முற்றிலுமாக உடன்படவில்லை" என்று தெரிவித்தார்.

பாஜக அரசின் அறிவிப்பிற்கு பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக இந்த லேட்டரல் என்ட்ரி முறைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News