புதுச்சேரி

வியாபாரியை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேர் துப்பாக்கி முனையில் கைது

Published On 2024-10-18 05:00 GMT   |   Update On 2024-10-18 05:01 GMT
  • 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி சின்னையன்பேட்டையை சேர்ந்தவர் சந்துரு (38). இவர் இந்திரா காந்தி சதுக்கம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவரிடம் 3 ரவுடிகள் மாமூல் மற்றும் ஓசியில் சிகரெட் கேட்டு மிரட்டினர். சந்துரு தர மறுத்ததால், சோடா பாட்டில், கடையில் இருந்த பொருட்களால் தலையில் தாக்கினர்.

இதில் அவர் காயமடைந்தார். இவரை தாக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது.

அவருக்கு உரிய சிகிச்சை தராதது மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்தும், நேற்று நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்புகள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரெட்டியார்பாளையம் வயல்வெளி பகுதி ரெயில்வே லைனில் பதுங்கியிருந்த குயவர் பாளையம் விஜய் (வயது20), 17 வயதுடைய 2 சிறுவர்களை துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது 3 பேரும் தப்பியோட முயன்றனர்.

அப்போது தடுமாறி விழுந்ததில் 3 பேருக்கும் கை உடைந்தது. ஒரு சிறுவனுக்கு கால் எலும்பும் முறிந்தது. 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

திலாசுப்பேட்டையில் உண்டியல் திருட்டு கும்பலிடம் இடம் பெற்று இருந்த விஜய் தனியாக பிரிந்து தனது கூட்டாளிகளுடன் அடிதடி, மாமூல் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News