புதுச்சேரி

புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடியது- மக்கள் நடமாட்டம் குறைந்ததால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு

Published On 2024-10-16 04:59 GMT   |   Update On 2024-10-16 04:59 GMT
  • கனமழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
  • மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி:

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் புதுச்சேரி-நெல்லூர் இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று புதுச்சேரிக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையை எதிர்கொள்ள அரசு துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை உடனுக்குடன் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தலா 30 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. நேற்று மதியம் 12 மணி முதல் புதுச்சேரியில் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை இரவு வரை தொடர்ந்தது. தொடர் மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்காக சாலையோரங்களில் கடைகளை வைக்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

கனமழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் மழை இல்லை. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. எப்போது வேண்டுமனாலும் மழை பெய்யலாம் என்ற சூழல் நிலவுகிறது.

புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News