சிறப்புக் கட்டுரைகள்

எல்லோருக்கும் இரண்டு முகங்கள் உண்டு- பார்த்து பழங்குகள்!

Published On 2024-07-01 09:21 GMT   |   Update On 2024-07-01 09:21 GMT
  • நல்லாரை காண்பது நல்லது, நல்ல சொற்கள் மட்டுமே பேசுவது நல்லது.
  • காலையில் கொஞ்ச நேரமாவது சூரிய ஒளி அவசியம் பட வேண்டும்.

நாம் இருக்கும் சூழ்நிலை நல்லோர்கள் இருக்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும். நல்ல வார்த்தைகள் பேசும் இடத்தில் இருக்க வேண்டும். நல்ல செயல்கள் நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். இதனை சத் சங்கம் எனலாம். இதன் பலன்கள் ஏராளம். இதனைப் பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையினை படிப்போம்.

விஸ்வாமித்திர மாமுனி ஒரு யாகம் செய்ய நினைத்தார். அந்த யாகம் எப்படிப்பட்டது என்றால் யாகத்தின் முடிவில் தன்னிடம் இருப்பதை எல்லாம் தானம் செய்து விட வேண்டும் என்பதாகும். இதுவே அந்த யாகத்தின் முறை.

அதன்படியே யாகத்தின் முடிவில் விஸ்வாமித்திர முனி தன்னிடம் இருந்ததை எல்லாம் தானம் வழங்கிக் கொண்டிருந்தார். இதனை கேள்வி பட்ட வசிஷ்ட முனி தானும் விஸ்வாமித்திரரிடம் தானம் பெற வேண்டும் என்று விரும்பினார்.

வசிஷ்டரே வருகிறார். தானம் பெறுகிறார் என்பது விஸ்வாமித்திரருக்கு மிகுந்த மகிழ்ச்சி. சற்று கர்வத்துடன் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டர் அமைதியாய் தன் ஆசிரமம் திரும்பினார்.

கொஞ்சம் நாட்கள் சென்று விஸ்வாமித்திரர் போல் தானும் யாகம் செய்ய வேண்டும் என வசிஷ்ட மாமுனியும் விரும்பினார். அதேபோல் யாகம் செய்து தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் செய்யத் தொடங்கினார்.

இதனை அறிந்த விஸ்வாமித்திரர் தானும் வசிஷ்டரின் தானத்தினைப் பெற ஆசைப்பட்டார். வசிஷ்டர் யாகம் செய்யும் இடத்திற்கு தானும் புறப்பட்டு சென்றார். ஆனால் விஸ்வாமித்திரர் அங்கு செல்வதற்குள் வசிஷ்டர் அனைத்தையும் தானம் செய்து முடித்திருந்தார். விஸ்வாமித்திரருக்கு கோபம் வந்தது.

'வசிஷ்டரே, நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் என்னை வெறும் கையுடன் அனுப்புகின்றீர்கள்' என வேகமாய் பேசினார்.

வசிஷ்டர் அவரை அமைதிப்படுத்தினார். 'கோபப்படாதீர்கள். பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்த்திருந்த சத்சங்க பலனாக ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கினை உங்களுக்குத் தருகின்றேன்' என்றார்.

இதைக் கேட்டு விஸ்வாமித்திரர் கோபம் கூடி விட்டது. அப்போதும் வசிஷ்டர் கோபப்பட வில்லை.

'விஸ்வாமித்திரரே, நீங்கள் போய் உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியனையும், இந்த பூமியையே தாங்கும் ஆதிசேஷனையும்- நான் அழைப்பதாகக் கூறி அழைத்து வாருங்கள்' என்றார் வசிஷ்டர்.

விஸ்வாமித்திரருக்கு சற்று குழப்பமாக இருந்தது. யோசித்தார். சரி போய்தான் பார்ப்போமே என்று சொல்லி சூரிய பகவானி டம் சென்றார்.

சூரிய பகவானோ, 'விஸ்வா மித்திரரே, நான் வந்தால் இங்கு என் வேலையை யார் கவனிப்பார்கள். நான் வர மாட்டேன் என்றார்.

இதே பதிலையே ஆதிசேஷனும் சொன்னார். விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம் சென்று நடந்தவற்றை கூறினார்.

வசிஷ்டர் உடனே அப்படியா? சரி, இருவரிடமும் சென்று வசிஷ்டரிடம் ஒரு நாழிகை 'சத் சங்க சக வாச' பலன் இருக்கிறது. அதில் இருவருக்கும் கால், கால்பங்கு தருவதாக கூறினார் என்று கூறி அழைத்துப் பாருங்கள்' என்றார்.

விஸ்வாமித்திரரும் மீண்டும் சென்று இருவரிடமும் அவ்வாறே கூறினார்.

இருவரும் உடனே 'இதோ வருகிறோம்' என்று கிளம்பினர். முதலில் மறுத்த நீங்கள் இப்போது மட்டும் வருகின்றீர்களே என்று கேட்டார் விஸ்வாமித்திரர்.

'வசிஷ்டர் அளிக்கும் சத்சங்க சகவாச பலன் எங்கள் வேலையினைச் செய்யும் என இருவரும் பதில் அளித்தனர்.

விஸ்வாமித்திரருக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. வசிஷ்டரிடம் இருந்து கால் பங்கு சத் சங்க பலனைப் பெற்று திரும்பினார்.

தன் ஆசிரமத்தினை அடைந்த போது ஆசிரமத்தில் இருவர் இவருக்காக காத்திருந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரை வணங்கி நாங்கள் பகவான் நாராயணனின் காவலர்கள் என்றனர். அவர்கள் மேலும் தொடர்ந்தனர்.

'பகவான் நாராயணன் ஸ்ரீ ராமராக அவதாரம் செய்யப் போகின்றார். அப்போது மகாலட்சுமியான சீதாதேவிக்கும், ஸ்ரீ ராமருக்கும் விஸ்வாமித்திரரே திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது என பகவானே கூறிவிட்டு வரச் சொன்னதாக சொன்னார்கள். மேலும் எல்லாம் சத் சங்க சகவாச பலன் என்றும் சொன்னார்கள். அவ்வாறே நிகழவும் செய்தது.

எனவே நல்லாரை காண்பது நல்லது, நல்ல சொற்கள் மட்டுமே பேசுவது நல்லது. நல்ல செயல்களை மட்டுமே செய்வது நல்லது. இத்தகைய சூழ்நிலைக்கு சென்று விடுவோமே.

இந்த கருத்தினை மனதில் பதிய வையுங்கள் எது நடந்து விடுமோ? நடந்து விடுமோ? என்று அடிக்கடி நினைத்து பயப்படுகின்றீர்களோ அது நடக்கும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும் என கூறப்படுகிறது. எனவே நல்லதை மட்டுமே நினையுங்கள்.

மனம் தூங்கி எழுந்த 10 நிமிடத்திற்குள் ஓராயிரம் எண்ண அலைகளை ஏற்படுத்துகின்றது. அதை செய்ய வேண்டும், இதை முடிக்க வேண்டும் என்றும் ஓட்டமாய் ஓடும். அதனுடன் நம்மால் ஈடு கொடுத்து ஓட முடியவில்லை.

இதனால் குழப்பம், மனச் சோர்வு மட்டும்தான் மிஞ்சுகின்றது. இதனை சரியாக்கா விட்டால் மனக் கட்டுப்பாடே இருக்காதே. ஆக காலை எழுந்தவுடன் அல்லது முதல் நாள் இரவு கூட அந்த நாளுக்கான வேலைகளை எழுதி விடுங்கள்.

நன்கு புரியும்படி எழுதுங்கள். அதிலேயே பாதி தெளிவாகும், பாதையும் ஏற்படும். மனதில் முறையற்ற ஓட்டங்களே வராது. சிந்திக்கவும், செயல்படவும் எளிதாய் இருக்கும்.

எந்த நிகழ்ச்சியிலும், பேச்சு வார்த்தையிலும் சுவற்றில் எரிந்த பந்து போல் வேகமாய் செயல்படவோ, பேசவோ வேண்டாமே. ஒரு சில நொடிகள் உங்களை கட்டுப்படுத்துங்கள். விளைவுகள் எந்த பிரச்சினையும் தராது.

மாறாக வேகமான பேச்சு, வேகமான நிகழ்வு இவை இரண்டும் தீராத பிரச்சினைகளைத் தரும். தினமும் ஒரு பக்கமாவது ஏதாவது புத்தகமோ செய்தி தாளோ படியுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கான ஏதோ ஒரு செய்தியினை அதில் தந்திருக்கும்.

காலையில் கொஞ்ச நேரமாவது சூரிய ஒளி அவசியம் பட வேண்டும். கடைக்கு போங்க, கோவிலுக்கு போங்க, நடை பயிற்சி போங்க. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீங்க.

சோர்வாக இருந்தால் சற்று வேலையை நிறுத்தி விட்டு 5 நிமிடம் மனதிற்கு பிடித்தாற் போல் ஏதாவது செய்யுங்கள். சரியாகி விடும்.

உங்கள் நேரம் முக்கியமானது. உண்மையில் இது ஒன்றுதான் மிக மிக முக்கியமானது. ஆகவே உங்கள் இலக்கினை சிறிது சிறிதாக பிரித்து வகுத்து விடுங்கள். படிப்படியாக செயல் படுத்துவது எளிது.

அடிக்கடி சிறிது நேரம் 'ஹாபி' எனப்படும் மகிழ்ச்சியான உங்களுக்கு பிடித்த எதனையும் செய்து பாருங்களேன். மனம் சோர்வடையாது. வேலை செய்யும் பொழுது முடிந்தவரை செல்போனை தள்ளி வையுங்கள். காதில் போன், கையில் வேலை, வாயில் பேச்சு, கூடவே நடை என்ற அஷ்டாவ தானம் மூளைக்கு சோர்வினைக் கொடுக்கும்.

அதிகம் குற்றம் கண்டு பிடித்தலை தவிருங்கள். மனதில் நிம்மதி ஓடிப்போய் விடும். ஒவ்வொரு வேலைக்கும் அதனை முடிப்பதற்கான கால நேரம் உண்டு. அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே உபயோகப்படுத்தாத பொருட்கள், துணிகள் இவற்றினை தேவைப்படுபவருக்கு கொடுங்கள். ஒவ்வொரு வேளை உணவிற்கும் அதிக கவனம் கொடுங்கள்.

மனதில் ஒரு விஷயத்தில் கடுப்பு தன்மை நிறைந்து இருக்கின்றதா. நீங்கள் உங்கள் மீதும் அடுத்தவர் மீதும் உள்ள காயத்தினை கண்டிப்பாய் ஆற்றிவிட வேண்டும். இல்லையெனில் காயம் புரையோடி இருவரது வாழ்வினையும் அழித்துவிடும்.

கோபம், வெட்கம், வேதனை என்று இருந்தால் நடப்பவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்களை மாற்றிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் தெரியும்.

உலகில் அநகேருக்கு நாம் பார்க்கும் ஒரு முகம் மட்டுமே கிடையாது. 2 முகங்களாவது இருக்கும். பார்த்து பழக வேண்டும்.

உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் உங்களை விட்டு விலகவே மாட்டார்கள். உணவினை மருந்து போல் சாப்பிட்டால் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் வராது.

Tags:    

Similar News