சிறப்புக் கட்டுரைகள்

கடின உழைப்பும் கனிவான ஓய்வும்!

Published On 2024-06-30 09:15 GMT   |   Update On 2024-06-30 09:15 GMT
  • ஓய்வில் திளைப்போருக்கு உழைப்பு கடினமானது என்றும் கருதுகிறோம்.
  • ஒன்றில்லாமல் மற்ற ஒன்றில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

நியாயமான உழைப்பிற்கும் நிம்மதியான ஓய்விற்கும் அன்றாடம் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்!.

கடுமையாக உழைக்கக் காத்திருக்கிறோமோ இல்லையோ நாம் எல்லோரும் கனிவாக ஓய்வெடுப்பதற்காக எப்போதும் ஆர்வத்தோடு காத்திருக்கத்தான் செய்கிறோம். ஆனால் பலருடைய வாழ்வில் நிம்மதியான ஓய்வும் தொந்தரவு இல்லாத உறக்கமும் வாய்ப்பதே இல்லை. உழைக்கத் தயங்குகிற நாம் உறங்கத் துடித்தாலும் அது வாய்க்காமல் போவதற்கு என்ன காரணம்?.

பொதுவாக உழைப்பும் ஓய்வும் எதிர் எதிர் ஆனவை என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்கும் மனிதனுக்கு ஓய்வு பகையானது என்றும், ஓய்வில் திளைப்போருக்கு உழைப்பு கடினமானது என்றும் கருதுகிறோம். உண்மையில் உழைப்பும் ஓய்வும் ஒன்றிலொன்று பிணைந்திருக்கும் இணைகள்; ஒன்றில்லாமல் மற்ற ஒன்றில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

உழைக்கத் தெரிந்தவர்களே உண்பதற்குத் தகுதியானவர்கள்! என்று கூறலாம். இதையே இன்னும் கொஞ்சம் மேம்படுத்திய சிந்தனையில் உழைக்கத் தெரிந்தவர்களே ஓய்வெடுக்கும் உரிமையும் உடையவர்கள் என்று உரக்கக் கூறலாம். ஏனெனில் உழைப்பும் ஓய்வும் ஒன்றையடுத்து ஒன்றாக நிகழ வேண்டியவை ஆகும்.

இவற்றிற்கு இடையில் உணவும் உண்பதும் இணைந்து கொள்வதாக இருக்கட்டும். நல்ல உழைப்பு, நற்பொருள் ஈட்டல், நல்லுணவு சேகரித்து வயிறார உண்ணல், நிம்மதியான ஓய்வு... இவைதானே வாழ்வியலின் சிரமமான நிகழ்வாக இருக்க வேண்டும்.

நமது உணவுக்கான உழைப்பை நாமே உழைக்காமல், யாரோ பிறரது உழைப்பில் வயிறுவளர்க்கப் பலர் முனைந்து செயல்படுகிறார் கள். ஆனால் திருடிப் பிழைத்த பிழைப்பாலும் உணவாலும் திருப்தியான உறக்கமும் ஓய்வும் கிட்டுமா?.

வாழ்நாள் இரவும் பகலுமாகப் பகுக்கப் பட்டிருப்பதுபோல, அவை தொடர்ந்து மாறிமாறி வந்து காலத்தின் நீட்சி நிகழ்ந்து கொண்டிருப்பதுபோல, மனித வாழ்க்கையிலும் உழைப்பும் ஓய்வும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இடையறாத உழைப்பு உடற் சோர்வையே தரும்;

அதுபோல விழிப்பில்லாத ஓய்வும் மனச் சோர்வைத் தந்துவிடும். உழைப்பும் ஓய்வும் மாறிமாறி வரும் வாழ்க்கை யிலேயே திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்து காணப்படும்.

உடல் தளரும்வரை உழைத்துவிட்டு உறங்கப் போகிறவர்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறார்கள். நல்லபடியாக உறங்கி, ஓய்வெடுத்தபிறகு விழித்து, மீண்டும் உழைப்பில் ஈடுபட்டால், முன்னைவிடப் பன்மடங்குப் புத்துணர்வுடன் செயபட்டுச் சாதனைவெற்றி களை எளிதில் எட்டிப் பிடித்துவிடுகிறார்கள்.

உழைக்கச் சோம்பேறித்தனப்படுவோர், எப்போதும் ஓய்வெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்; ஆனால் அவர்கள் எடுக்கிற ஓய்வென்பதும் உறக்கமென்பதும், நோய்ப் படுக்கையில், நோயாளிகள் பெறுகிறதைப்போல வலிகள் நிறைந்ததாகவே இருக்கும்.

உலகில் ஒருவர் நினைத்தால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கடின உழைப்பைச் சொந்த முயற்சியில் மேற்கொண்டு விடலாம்; ஆனால் கனிவான ஓய்வு என்பதும், நிம்மதியான உறக்கம் என்பதும் தாமாக அமைந்தால் மட்டுமே உண்டு.

காட்டின் ராஜா சிங்கத்திற்கு ஆறேழு மாதமாகச் சரியாகத் தூக்கம் வராத நோய் வந்துவிட்டது. பகலில் படுத்தாலும் உறக்கமில்லை. இரவில் படுத்தாலும் கண்மூடவே முடியவில்லை. ஓய்வென்பது இல்லவே இல்லை. உலகின் மிகச்சிறந்த பஞ்சுமெத்தைகள் மூலம் படுக்கைகள் வந்து சேர்ந்தன.

சிங்க ராஜாவுக்குப் பிடித்தமான உணவுவகைகள் மிகுந்த சுவையுடன் சமைக்கப்பட்டு, மூன்றுவேளையும் பரிமாறப் பட்டன. கைகால் பிடித்துவிடப் பரிவாரங்கள்; நாலாபுறமும் நின்று இரவுபகலாக விசிறிவிடப் பணியாளர்கள்... எவ்வளவு இருந்தாலும் உறக்கம் மட்டும் ஒருபொட்டு வரவில்லை சிங்கராஜாவுக்கு.

மந்திரி யானையார் அறிவிப்பும் செய்துவிட்டார்; எப்படியாவது நமது ராஜாவை உறங்க வைப்பவருக்குத் தக்க சன்மானங்கள் வழங்கப்படும். காட்டில் வாழும் மிருகங்கள் எல்லாமும் ஆளுக்கொரு மருந்துடன் ராஜாவுக்கு வைத்தியம் பார்க்க வந்துவிட்டன.

ஒரு காட்டெருமை ஒரு பெரிய குடம் நிறையப் பாலைக் கொண்டுவந்து அரண்மனையிலேயே சுண்டக்காய்ச்சி, இரண்டு மூன்று இரவுகளுக்குக் கொடுத்துப் பார்த்தது; பயனில்லை; வயிறு உப்பிக்கொண்டதுதான் மிச்சம்.

ஒரு குரங்கு எங்கிருந்தோ காட்டில் ஏதேதோ புற்கள், மூலிகைகளையெல்லாம் போட்டு ஒரு தைலத்தைத் தயாரித்துக் கொண்டுவந்து சிங்கராஜாவின் உடம்பு முழுவதும் தடவிவிட்டு வெந்நீர்க் குளியல் செய்ய வைத்தது; சிங்கராஜா முன்னைக்காட்டிலும் சுறுசுறுப்பானாரே தவிர உறக்கம் என்பது வரவில்லை.

பலாப்பழ வைத்தியம், மாம்பழ வைத்தியம், வாழைப்பழ வைத்தியம் என ஏகப்பட்ட வைத்தியங்களோடு ஏகப்பட்ட மிருகங்கள் வந்தன; வயிறும் உடம்பும் புண்ணாயினவேயொழிய உறக்கம் வந்தபாடில்லை. ஒருகட்டத்தில் இனிமேல் வைத்தியம் என்று கூறிக்கொண்டு யார் உள்ளே வந்தாலும் அரண்மனைக்குள் விடாதீர்கள்! என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் சிங்கராஜா.

அந்த நாட்டிலுள்ள புத்திசாலியான நரியொன்று ராஜாவுக்கு மருத்துவம் பார்க்கப்போகிறேன் என்று அரண்மனைக்குள் நுழைந்தது. வந்தால் வருகிறது! என அனுமதித்த சிங்கராஜா, ஒரு நிபந்தனை ஒன்றை விதித்தது. அதாவது இனிமேல் மருத்துவம் பார்க்க யார் வந்தாலும், நோய் குணமாகவில்லையென்றால், அவர்கள் தலை துண்டிக்கப்படும். பரவாயில்லை நான் தயார் என்று நரி அரசனிடம் சென்று நின்றது.

"வணக்கம் அரசே! தங்களுக்கு உறக்கம் வராமலிருக்கும் நோய்க்கான மருந்து என்னுடைய தாத்தா நரியாரிடம் இருக்கிறது. அவர் நமது காட்டிற்கு அருகிலுள்ள மலைச் சிகரத்தின் உச்சியில் குடியிருக்கிறார். இப்போது நீங்கள் என்னோடு வந்தால் அவரிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அவர் உங்களை நேரடியாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டுச் சரியான மருந்தை வழங்கி விடுவார். புறப்படுங்கள் செல்வோம்!" என்றது நரி.

"நரியே! நோய்மட்டும் குணமாகவில்லை யென்றால், உன் தலையோடு உன் தாத்தா நரியின் தலையும் சேர்த்து துண்டிக்கப்படும் ஜாக்கிரதை!" என்று கூறிக்கொண்டே சிங்கராஜா நரியோடு மலைச்சிகரம் நோக்கிக் கிளம்பியது. காலையில் கிளம்பியவர்கள் நடந்தே மலைச்சிகரம் சென்று அடையப் பிற்பகல் மூன்று மணி ஆகிவிட்டது.

அங்கே போனப்பிறகுதான் நரி சொன்னது," அரசே என்னை மன்னித்து விடுங்கள்! என்னுடைய நரியார் தாத்தா அவசர வேலை நிமித்தமாக அடுத்துள்ள மலைவரை சென்றுள்ளார்; அவர் நாளைதான் இங்கு வந்து சேர்வார்; நான் மறந்தே போய் விட்டேன்; இப்போதைக்குக் கீழே இறங்கிப் போவோம்; நாளை மீண்டும் வருவோம்!".

கடும்கோபத்திற்கு ஆளான சிங்கம், "இதுவரை இவ்வளவுதூரம் சிரமப்பட்டு ஏறிவந்ததே மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்; இப்போது மீண்டும் இறங்கிப்போய், மீண்டும் நாளை ஏறி வர வேண்டுமா?" என்று சோகமாக கர்ஜித்தது. "ராஜா நோய் நிச்சயம் தீருமென்றால், சிரமப்படுவதில் தவறில்லையே!" பரிதாபமாகச் சொன்னது நரி.

மறு நாள் காலை. அரண்மனை வாசலில் வந்து சிங்கராஜாவை மீண்டும் மலைச் சிகரத்திற்கு அழைத்துப் போவதற்காக நரி நின்றது. வாசலில் இருந்த காவலர்கள், 'அரசரை இன்னும் நாலைந்து மணிநேரத்திற்குப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லை; அவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டி ருக்கிறார்' என்று கூறினர்.

தனது புத்திசாலித்தனம் வேலைசெய்யத் தொடங்கி விட்டதை எண்ணி மனத்திற்குள் மகிழத் தொடங்கியது நரி. ஆமாம்! தனக்கான உணவுத்தேவைக்குக்கூட வேட்டையாடச் செல்லாத சிங்கத்திற்கு உறக்கம் எப்படி வாய்க்கும்? ராஜாவாக இருந்ததால் எந்தவொரு உடல் உழைப்பையும் மேற்கொள்ளா ததால் சிங்கத்திற்கு உறக்கம் வராத நோய் ஒட்டிக்கொண்டது;

நேற்று மலைச் சிகரம் ஏறி இறங்கும் உடல் உழைப்பு மேற்கொண்டதால், இன்று காலைவரை சிங்கம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது; இனி அது விழித்துக்கொள்ளும்!. உழைத்தால் தான் உறக்கமும் ஓய்வும் சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ளும்.

உழைப்பு என்பது இருவகை யில் நிகழும்; ஒன்று உடல் சார்ந்த உழைப்பு; மற்றொன்று மூளை சார்ந்த உழைப்பு. இந்த இருவகை உழைப்பிலும் மனம் சம்பந்தப்பட்டிருக் கும். மனம் சோர்ந்து போகாதவரை உடலும் மூளையும் இடைவிடாது உழைத்துக்கொண்டே இருக்கும்; மனம் சோர்வடையும்போது தேவைப்படும் அளவுக்கு ஓய்வை மேற்கொண்டால், பிறகு உடலும் மூளையும் மனமும் புத்துணர்வைப் பெற்றுப் புதுப்புது உழைப்பு முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபடத் தொடங்கும்.

மனித வாழ்க்கை என்னும் வண்டி, திட்டமிட்டபடி வெற்றியை நோக்கிப் பயணிக்க உழைப்பு, ஓய்வு என்னும் இரண்டு மாடுகள் சமமான அளவிலும் பலத்திலும் இழுத்துச்செல்லத் தேவை.

வாழ்க்கையென்னும் வண்டியை முன்புறமாக உழைப்பு என்னும் மாட்டையும், பின்புறமாக ஓய்வு என்னும் மாட்டையும் கட்டி இழுத்தால் வண்டி முன்னும்போகாது; பின்னும் போகாது!;

மாறாக வண்டிதான் உடைந்து போகும். வாழ்க்கை என்னும் வண்டி சீராகவும் சுகமாகவும் நகர்ந்துசெல்ல உழைப்பும், ஓய்வும் வண்டியின் முன்னே பூட்டப்பட்ட இரட்டைமாட்டு வண்டிகள்போல ஒன்றற்கொன்று ஒத்தாசையோடு செயல்பட வேண்டும்.

உடல் உழைப்பு சார்ந்ததாகவோ அல்லது மூளை உழைப்பு சார்ந்ததாகவோ நாம் பார்க்கும் வேலைகளில் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், உழைப்பு-ஓய்வு-உழைப்பு-ஓய்வு என உழைப்பிற்கும் ஓய்விற்கும் சரிவிகிதமான நேரங்களை ஒதுக்கக் கூடியதாக நமது அன்றாட வாழ்வியல் அமைந்திருக்க வேண்டும்.

ஓய்வு என்பதும் உறக்கம் என்பதும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையிலிருந்து முழுமையாக விடுபடுவது ஆகும். இதுவரை பார்த்தவரை இந்த வேலை போதும்! என்கிற நிலையில் வேலையை நிறுத்திவிட்டு ஓய்வுக்குச் செல்லவேண்டும்.

வேலை முடியும்வரை தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று நினைப்பது, நமது மனத்திற்கும் உடம்புக்கும் நாம் இழைக்கும் துரோகமாகும். கனத்தில் மிகவும் லேசான மயில்தோகையாக இருந்தாலும் அளவுக்குமீறி ஏற்றினால் வண்டியின் பாரம் தாங்கமாட்டாமல் அச்சு முறிந்து போகும் என்பார் வள்ளுவர். குறிப்பிட்ட ஓய்வு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வேலைப்பளு ஏறிக்கொண்டே போனால் அழுத்தம் தாங்காமல் மனிதமனமும் முறிந்து போகும்; உடலும் தளர்ந்து போகும்.

உழைக்கும்போது உழைப்பிலும் ஓய்வின் போது ஓய்விலும் முழுக்கவனம் செலுத்தும் வித்தை கைவரப் பெற்றவர்களாக நாம் மாறவேண்டும். சிலர் வேலை பார்ப்பதிலேயே அடிமையாகிப் போனவர்களாக இருப்பார்கள்;

ஈடுபாட்டோடு உழைப்பதன் மூலமாகவே அந்த உழைப்படிமைத் தனத்திலிருந்து அவர்களை வெளிக்கொணர முடியும். நன்றாக மனத் திருப்தியோடு உழைப்பவர்களாலேயே, நன்றாக மன அமைதியோடு உறங்கவும் ஓய்வெடுத்துக் கொள்ளவும் முடியும்.

கடின உழைப்பு கனிவான ஓய்விற்கு உதவி செய்கிறது! கனிவான ஓய்வு கடின உழைப்பிற்குக் கதவுகள் திறக்கிறது!

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News