தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் இன்று
- வீரத்துறவி ‘வீர முரசு' என புகழப்பட்ட சிவாவின் பேச்சில் அனல் பறக்கும்.
- தோற்றப்பொலிவுடன் சிறைக்குச் சென்ற சிவா ஆறு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து திரும்பும்போது தொழு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார்.
இந்திய விடுதலை போராட்டக் காலத்தில் வெள்ளை ஏகாதிபத்திய அடாவடித்தனத்தை தீரத்துடன் எதிர்த்து, விடுதலை சிந்துபாடிய தியாகி சுப்பிரமணிய சிவா.
வீரத்துறவி 'வீர முரசு' என புகழப்பட்ட சிவாவின் பேச்சில் அனல் பறக்கும். அவர் இதயத்தில் இருந்து பொங்கும் உணர்வுகளும் நாவில் இருந்து எழும் வார்த்தைகளும் சுதந்திரக்கனலை மக்கள் மத்தியில் பற்றி எரியச் செய்தது. 'சிவம் பேசினால் சவமும் வீறுகொண்டு எழும்' என்று பாரதியாரால் பாராட்ட பெற்ற சுப்பிரமணிய சிவா 1884 அக்டோபர் 4-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பிறந்தார். தந்தை ராஜம் அய்யர். தாயார் நாகலட்சுமி. பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். சதானந்த சுவாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்ந்ததால் சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார். பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 12 வயது வரை மதுரையில் இருந்தார். இளம் வயதிலேயே தமிழ் பற்றும் தேசப்பற்றும், அவரை ஆட்கொண்டன. வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கொட்டார கரையில் சதானந்த சுவாமிகளிடம் ராஜயோகம் பயின்றார்.
பிறகு தமிழகம் திரும்பி சிவகாசி போலீஸ் நிலையத்தில் எழுத்தராக சேர்ந்து, மறுநாளே விலகினார் திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டி தர்மபுரி பாலன சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் ஊர் ஊராக நடந்து சென்று பொதுமக்கள் மத்தியில் வீராவேசமாக பேசி விடுதலைக்கனலை மூட்டினார். காவி உடை அணிந்து வீரத்துறவியாக மாறினார். தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார், பாரதியாரை சந்தித்தார். இருவருக்கும் நண்பரானார். சுதந்திரப் போரில் ஈடுபட்ட சிவா பத்திரிகையில் விடுதலை வேட்கையை தூண்டும் விதத்தில் கட்டுரைகளை எழுதினார். பொதுக்கூட்டங்களில் அனல்பறக்கும் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, நெல்லை ஆகிய ஊர்களுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தினார். வெள்ளையர் அரசு வ.உ.சிதம்பரனாரையும், சுப்பிரமணிய சிவாவையும் கைது செய்து ராஜதுரோக வழக்கு தொடர்ந்தது. இதில் வ.உ.சி.க்கு 20 ஆண்டுகள் கடுங்காவலும், சிவாவுக்கு 10 ஆண்டு கடுங்காவலும் விதிக்கப்பட்டது. பின்னர் சிவாவுக்கு 6 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. வ.உ.சி. கோவை சிறையிலும், சிவா திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அவர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளானார்கள். தோற்றப்பொலிவுடன் சிறைக்குச் சென்ற சிவா ஆறு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து திரும்பும்போது தொழு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இதனை கண்டு சுப்பிரமணிய சிவா மனம் கலங்கவில்லை. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் பயணத்தை மேற்கொண்டு வெள்ளையர் ஆட்சியின் கொடுமையை விளக்கி பிரசாரம் செய்தார்.
தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். ஞானபானு, பிரபஞ்ச மித்திரன், இந்திய தேசாந்திரி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். தனித்தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு 5 ரூபாய் பரிசு என்று 1915-ல் அறிவித்த தனித்தமிழ் பற்றாளர்.
பாரத தேவிக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது சிவாவின் லட்சியமாக இருந்தது. பாப்பாரப்பட்டியில் மக்கள் உதவியுடன் 7 ஏக்கர் நிலம் வாங்கி அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோவில் கட்ட முடிவு செய்து தேசபந்து சித்தரஞ்சன் தாசை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். தொழு நோயின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராக சென்று சொற்பொழிவாற்றி நிதி திரட்டினார். தொடர் பயணத்தால் அவரது உடல் நலம் குன்றியது. இருந்தாலும் சென்ற இடமெல்லாம் விடுதலைக்கான பிரசாரமும் செய்தார்.
எந்த நேரமும் பாரத விடுதலை பாரத மாதா வழிபாடு என்று வாழ்ந்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவா 23-7-1925-ல் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார்.
சுப்பிரமணிய சிவாவின் அளப்பரிய சேவையை பாராட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தியாகி சுப்பிரமணிய சிவா மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. வத்தலக்குண்டு பஸ் நிலையம் சிவாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.