சிறப்புக் கட்டுரைகள்

முடங்கும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

Published On 2024-06-28 09:31 GMT   |   Update On 2024-06-28 09:31 GMT
  • அரசின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.
  • பயனாளிகளுக்கு கிடைக்காமல் போவதால், முடங்கும் அபாயம்.

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, `பிக்மி' எண் பெறப்படும்.

 கர்ப்பகாலத்தின் 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பேறு காலத்தில் 3-வது மற்றும் 6-வது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.

அதில் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரீட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர்துண்டு உள்ளிட்டவை இருக்கும். முன்பு 5 தவணையாக வழங்கப்பட்ட வந்து உதவித்தொகை, தற்போது 3 தவணையாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இதில் பல பயனாளிகள் ஆரம்பம் முதல் முறையாக பதிவு செய்து, பிக்மி எண் பெறப்பட்டும், தற்போது குழந்தை பிறந்த நிலையிலும் உரிய முதல் தவணை உதவித்தொகை கூட கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கு மேலாக பதிவு செய்து பயனாளிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது குழந்தை பிறந்த 3 மாதங்கள் ஆன நிலையில் கூட, திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் உதவித்தொகையின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் கணவன், மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இதனால் ஆதார் எண்ணில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பெறவோ, கைவிடப்பட்ட செல்போன் எண்ணுக்கு பதிலாக வேறு எண்ணை ஆதாருடன் இணைப்பதிலோ பெரும்பாடாகிவிடுகிறது என குற்றம் சாட்டுக்கின்றனர்.

அதேபோல் வங்கியுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், உள்ளிட்ட குழப்பங்களால் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. தற்போது புதியதாக அஞ்சல் சேமிப்பு கணக்கு எண்ணையும் கேட்பதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு குழந்தை பிறந்து 3 மாதங்களை கடந்த நிலையிலும் எங்களுக்கு வரவேண்டிய உதவித்தொகை தொடர்பாக, இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டுக்கு பதில் ஒன்று தான் வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்காததால், வயிற்றுக்குள் வளரும் குழந்தைகளும் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் பாதிக்கப்படும் சூழலை பார்க்கிறோம். போதிய தெம்பின்றி குழந்தைகள் பிறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பின்னிப்பிணைந்துள்ளன.

அரசின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக இந்த திட்டம் போற்றப்படுகிறது. ஆனால் அதேசமயம் இந்த திட்டம் தற்போது உரிய பயனாளிகளுக்கு கிடைக்காமல் போவதால், முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பல கோடி கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெற்றுள்ள, முதன்மை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, அரசின் மீதான அனைவரின் நம்பிக்கையை காபாற்ற வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஒரு சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இதுவரை மாநிலம் முழுவதும் டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 1.17 கோடி பெண்களுக்கு ரூ.11,702 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி இப்போது மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. கா்ப்ப காலத்தின் நான்கா வது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2,000 வழங்கப்படுகிறது.

அதேபோன்று பேறுகாலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

ஊட்டச்சத்து பெட்டகங்களில் நெய், உலர் பேரிச்சம், இரும்புச்சத்து திரவியம், கர்ப்பிணி தாய்க்கான ஊட்டசத்து மாவு போன்றவை இருக்கும்.

இதற்கென்று இப்போது 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின்கீழ் இணையதளப் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் உடனே மகப்பேறு நிதியுதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அது இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News