முதுமையில் சவாலாகும் உடல் மாறுபாடுகள்!
- நமது உடலில் ராஜ உறுப்புகள் எனப்படுவது மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் இவை ஐந்தும் தான்.
- முதுமையில் அதிக அளவு பாதிப்படையும் மற்றொரு உறுப்பாக உள்ளது ‘சிறுநீரகம்’.
முதுமை ஏன் இவ்வளவு சவாலாக இருக்கிறது? முதுமையில் ஏன் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது? அப்படி என்ன தான் நடக்கிறது முதுமையில்? என்பதை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இயற்கையாகவே முதுமையில் உடல் உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு மாறுதல்கள் நோய்களுக்கு காரணமாகின்றன. நாளுக்கு நாள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளிலும் உண்டாகும் மாற்றம், முதியோர்களின் ஆரோக்கியத்தை அடியோடு சாய்த்து விடுகின்றது.
நமது உடலில் ராஜ உறுப்புகள் எனப்படுவது மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் இவை ஐந்தும் தான். இந்த ஐந்து முக்கிய உறுப்புகளில் முதுமையில் ஏற்படும் எண்ணிலடங்கா மாற்றங்கள், உடல் செயலியலில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.
முதுமையில் அப்படி என்ன தான் நடக்குது? என்று கேள்வி கேட்க விரும்பும் முதியவர்களுக்கு பதில் பக்கம் பக்கமாய் உள்ளது அதிர்ச்சி தான்.
முதலில் முதுமையில் இதயம் மற்றும் ரத்தக் குழாய்கள் அதிக பாதிப்படைகின்றன. ரத்த குழாயில் உள்ள பக்க சுவரில் செல்கள் ஒழுங்கற்ற வடிவமும், தடிப்பும் பெறுவதால் ரத்த குழாய்கள் சுருங்க துவங்குகின்றன. இதனால் ரத்த அழுத்தம் இயல்பாகவே வயதுக்கு தகுந்தாற் போல் அதிகரிக்கிறது. 30 வயதில் 120 முதல் 130 மி.மீ. வரை இயல்பாக இருக்கக்கூடிய ரத்த அழுத்தம் 60 வயதில் 160 மி.மீ. எட்டிவிடுகிறது. ஏற்கனவே ரத்த அழுத்தம் அதிகரிக்கும்படியாக இருப்பதால், கூடுதலாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உப்பு சேர்த்த உணவுகளை தவிர்ப்பது முதுமைக்கு நல்லது.
முக்கிய ராஜ உறுப்பான, உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் செலுத்தும் இதயமானது ரத்த குழாய்கள் சுருக்கத்தினால், அதிக வேகத்துடன் விசையுடனும் ரத்தத்தை அனுப்ப வேண்டியுள்ளது. ஆகையால் இதயம் தனது இயல்பான அளவை விட அதிக எடை கொண்டதாக உருமாறுகிறது. மேலும் இதயத்தில் உள்ள ரத்தம் செலுத்தும் இடது பகுதி 30 சதவீதம் வரை தடிமனமாக மாறுவதும் குறிப்பிடத்தக்கது. ஆக, முதுமையில் இதய நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவது மிக மிக அவசியம்.
இதயத்திற்கு அடுத்து நுரையீரல் பிராண வாயுவை உட்கிரகித்து உடல் செல்களுக்கு கொடுக்கும் அத்தியாவசிய பணியை செய்கிறது. மூச்சு விடும்போது சுருங்குவதும், மூச்சினை உள்ளிழுக்கும்போது விரிவதும் நுரையீரலின் இயல்பு. இவ்வாறு சுருங்கி விரியும் தன்மைக்கு காரணம் அதில் உள்ள எலாஸ்டின் நார்த்திசுக்கள் தான். ஆனால் முதுமையில் நாளாக நாளாக இந்த எலாஸ்டின் திசுக்கள் தேய்மானம் அடைவதால் நுரையீரல் சுருங்கி விரிவதும் இயல்பாக குறைந்து விடுகிறது.
மேலும் பிராண வாயுவை உட்கிரகிக்கும் காற்று நுண்பைகள் எண்ணிக்கையும் படிப்படியாக குறைய துவங்கிவிடுகிறது. 90 வயதை எட்டும்போது கிட்டத்தட்ட 25 சதவீதம் காற்று நுண்பைகள் குறைந்து விடுவதாக உள்ளது. எனவே உடல் ஆரோக்கியமாக இருக்கவும், போதுமான அளவு பிராணவாயு கிடைக்கவும், சித்த மருத்துவம் கூறும் மூச்சு பயிற்சிகளை மேற்கொள்வது முதுமையில் நலம் பயக்கும்.
முதுமையில் அதிக அளவு பாதிப்படையும் மற்றொரு உறுப்பாக உள்ளது 'சிறுநீரகம்'. முதுமை மட்டுமல்லாது, இன்றைய உணவு பழக்க வழக்கங்களும், இயற்கை அல்லாத நஞ்சு கலந்த உணவுகளும் சிறுநீரக பாதிப்பு உண்டாக காரணமாகின்றன. 80 வயதைத் தொடும் முதியவர்களின் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் 60 முதல் 70 சதவீதம் வரை மட்டுமே இருப்பதாக உள்ளது.
இதனால் உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுப்பொருட்கள் முழுமையாக நீங்காமல், யூரியா ரத்தத்தில் அதிகரிக்கும். பின்னாளில் இதுவே சிறுநீரக செயலிழப்புக்கும் வழிவகுக்கும். சிறுநீரகம் செயலிழந்தால் இதயம் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிதைந்து விடும். எனவே முதுமையில் சிறுநீரக நலனில் கூடுதலாக அக்கறை செலுத்துவது அவசியம்.
யூரியா மட்டுமின்றி நாளாக நாளாக கிரியாட்டினின் எனும் கழிவுப்பொருளும் வெளியேற்றப்படுவது குறைகிறது. 80 வயதில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவிற்கு கிரியாட்டினின் வெளியேற்றம் குறைவதாக உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் அதிகப்படியான சிறுநீரகத்திற்கு பாதிப்பை உண்டாகும் மருந்துகள் பரிந்துரைப்பதிலும் கடினமான சூழல் உண்டாகிறது. எனவே முதுமையில் மருந்துகளை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல திசுக்கள் தேய்மானம் அனைத்து உறுப்புகளிலும் நடக்கிறது. அந்த வகையில் சிறுநீரகத்தில் ஏற்படும் தேய்மானம் உடலுக்கு அத்தியாவசியமான தாது உப்புக்களைக் கூட மீண்டும் உறிஞ்ச முடியாமல் அப்படியே வெளியேற்றுவதால் உடலில் தாது உப்புக்களுக்கு பஞ்சம் ஏற்படுகிறது. இதற்காகத் தான் முதுமையில் சத்துக்கள் நிறைந்த உணவு அவசியம் என்பதும் அறியக்கிடக்கின்றது.
சிறுநீர்ப்பையில் ஏற்படும் மாறுபாடுகள் அடிக்கடி சிறுநீர் போவதை தூண்டும். இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் மனம் நொந்து வாடும் முதுமைக்கு ஆரோக்கியம் எட்டாக்கனியாகும். அதிலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் இதனால் துன்புறுவது குறிப்பிடத்தக்கது. சிறுநீரை அடக்கவும் முடியாமல், அவசரமாக சென்று கழிக்கவும் முடியாமல் சிரமப்படும் பெண்களுக்கு முதுமை மிகவும் கடினம் தான்.
முதுமையில் அதிகப்படியான உடலியல் மாற்றங்களைப் பெறுவது சீரண மண்டலமும் கூட தான். மணம், சுவை ஆகிய இரண்டு புலன்களும் கூட முதுமையில் படிப்படியாக குறைந்துவிடுகிறது. நாவின் சுவை மொட்டுக்கள் எண்ணிக்கையில் குறைவதும், மூக்கில் உள்ள மணம் அறியும் நரம்புகள் தேய்மானம் அடைவதும் தான் முக்கியக் காரணம். இந்த உண்மைத் தன்மை அறியாத முதுமை, இதற்கென மருத்துவமனைகளை நாடுவது பலனற்றது.
அதே போல் 'ஜெர்ட்' எனும் உணவு எதிரெடுத்தல் நோயும் முதுமையில் இயல்பாகவே தோன்றி விடுகிறது. உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள இறுக்குத்தசைகள் செயல்படும் தன்மையை இழந்து விடுவதால் உணவு உண்ட பிறகு வயிற்றில் உள்ள அமிலமும், உணவுப்பொருட்களும் மேலே எதிரெடுத்து இரவில் தூக்கத்தைக் கலைக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் ஆகிய உபாதைகளும் தோன்றும்.
சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் ஏற்படும் மாற்றங்கள் வயிறு பொருமல், வயிற்று வலி, மலச்சிக்கல் ஆகிய உபாதைகளை உண்டாக்கும். மலச்சிக்கல் முதுமையில் மிகப்பெரிய சிக்கல் என்றே சொல்லலாம். பெருங்குடலில் உள்ள சவ்வுகள் மெலிந்து நலிவதன் காரணமாக, பெரிஸ்டால்சிஸ் எனப்படும் குடல் அசைவுகள் குறைந்து, மலச்சிக்கல் தோன்றி முதுமையை வாட்டும். மேலும் நாட்பட்ட நோய்களுக்கான சில மருந்து மாத்திரைகளும் முதுமையில் மலச்சிக்கலை உண்டாக்கும்.
முக்கிய ராஜ உறுப்பான கல்லீரல் அதன் எடையை விட குறைவதும், அதில் சுரக்கும் நொதிகள் அளவு குறைவதும், பித்தத்தின் அளவு குறைவதும் செரிமானம் சார்ந்த நோய்நிலைகளுக்கு காரணமாகிறது. கல்லீரலில் உண்டாகும் மாற்றம் இன்னும் பல்வேறு நோய்நிலைகளுக்கு வழியமைக்கும். கணையத்தில் உள்ள நொதிகள் சுரப்பு குறைவதால் பால் மற்றும் பால் பொருட்கள் செரிமானம் கூட வெகுவாக குறைந்து விடும். நீரிழிவு நோய்க்கு காரணமான இன்சுலின் ஹார்மோன் சுரப்பு நாளுக்கு நாள் குறைவதால் சரக்கரை கட்டுக்குள் வருவது வெறும் கனவாகவே மாறக்கூடும்.
உடலில் ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பிகள் பலவும் முதுமையில் எடை குறைந்து பலவீனம் அடைகின்றன. இருப்பினும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு கடைசி வரை இயல்பாக இருக்கக்கூடும். அதே போல் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக திகழும் இன்சுலின் ஹார்மோன் செயல் திறனுக்கு, உடல் செல்கள் குறைவான உணர்வுத் திறன் கொண்டதாக மாறுவதால், சர்க்கரை அளவு குறைவது கடினமாகிவிடும். 50 வயதுக்கு மேல் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் வெறும் வயிற்றில் பரிசோதிக்கும் சர்க்கரை அளவு (எப்.பி.எஸ்.) 6 முதல் 14 மி.கி. வரை இயல்பாகவே அதிகரிக்கக்கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். ஆக, முதுமையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருப்பதும் இயல்பு தான்.
மிக முக்கியமான ராஜ உறுப்பான மூளையில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். முதுமையில் படிப்படியாக நரம்பு செல்கள் எண்ணிக்கையும், மூளையில் சுரக்கும் நரம்புகடத்திகள் எனப்படும் ஹார்மோன்களான டோபமைன், செரோடோனின் ஆகியவற்றின் அளவும் படிப்படியாக குறைந்துவிடும். இதனால் கை கால் நடுக்கம், ஞாபக மறதி, மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய குறிகுணங்கள் தோன்றி முதுமைக்கு சவால்விடும்.
மருந்துப் பெட்டகத்தை தலையணைப் போல் வைத்துக்கொண்ட போதிலும், கட்டுக்குள் வராத சர்க்கரை அளவும், குறையாத ரத்த அழுத்தமும், கால் வீக்கமும், கடினப்பட்டு வெளியேற்ற முடியாத மலமும், அடிக்கடி வெளியேறும் சிறுநீரும், வறட்சியான தோல்களும், தூக்கமின்மையும், தளர்ந்த நடையும், அயர்ந்த உடலும், மூட்டுக்கள் வலியும், முதியவர்களை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் பாதிக்கும்.
ராஜ உறுப்புக்கள் மட்டுமின்றி, உடலில் அனைத்து உறுப்புகளும், ஏன் ஒவ்வொரு திசுக்களும் முதுமையில் பல்வேறு உடலியல் மாறுபாடுகளை அடைந்து முதுமையைத் துன்புறுத்தும். இத்தகைய மாற்றங்கள் முதுமையில் மிகப்பெரிய சவால்கள் தான்.
ஆனால், பல்வேறு சவால்களை சாதனையாக்கி, சமூக பொறுப்புகளை வென்று வாகை சூடிய இளமைப் பருவத்தைக் கடந்து வந்த முதுமைக்கு சவால்கள் புதிதல்ல. இதனைப் புரிந்து கொண்டு வாழ்வியலை பழகி வந்தால் முதுமையின் ஆரோக்கியம் கைக்கு எட்டும் தூரம் தான்.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com