சிறப்புக் கட்டுரைகள்

கண்களில் வாசம் செய்யும் நிமி

Published On 2023-04-08 10:45 GMT   |   Update On 2023-04-08 10:46 GMT
  • இமயமலை அடிவாரத்தில், திரபுக்தி என்றழைக்கப்பட்ட பகுதி, நிமி என்னும் இளவரசருக்கு வழங்கப்பட்டது.
  • தேகம் இல்லாத நிலையிலும் நிமியின் ஜீவன், தேவியைச் சரண் புகுந்தது. ‘அம்மா, எல்லோருக்கும் நன்மையைக் கொடு தாயே’ என்று வேண்டியது.

இட்சுவாகு என்னும் மன்னருக்கு நிறைய புதல்வர்கள். மிகப் பெரிய நிலப்பரப்பில் ஆட்சியைத் தோற்றுவித்த இட்சுவாகு, புதல்வர்களுக்கு ஆட்சியைப் பிரித்துக் கொடுத்து, அவரவர்களுக்கென்று தனித்தனிப் பகுதிகளையும் கொடுத்தார். இமயமலை அடிவாரத்தில், திரபுக்தி என்றழைக்கப்பட்ட பகுதி, நிமி என்னும் இளவரசருக்கு வழங்கப்பட்டது.

தருமவானாகவும், எல்லோரின் நலத்தையும் கருத்தில் கொள்பவராகவும் இருந்த நிமி, திரபுக்தியின் அரசரானார். சிறப்பானதொரு ஆட்சியை நடத்தினார். நிமி அரசர், அம்பாளின் உபாசகரும்கூட!

இந்த நிலையில் நிமி அரசருக்கு ஆசை ஒன்று தோன்றியது. சத்ர யாகம் நடத்தவேண்டுமென்பதே இந்த ஆசை. யாகங்களிலேயே சிறப்பானதும், உலக நன்மைக்காகச் செய்யப்படுவதுமான சத்ர யாகம், நீண்ட நாட்கள் செய்யப்படவேண்டியது. சொல்லப் போனால், நாட்கள் அல்ல, 500 ஆண்டுகள் நிகழ்த்தப்படவேண்டியது. இப்படியொரு யாகத்தை நிகழ்த்த முடிவு செய்த நிமி (அப்போதைய காலங்களில் சராசரி ஆயுள்காலம் 1000 ஆண்டுகளுக்கு இருந்ததாம்), யாகத்திற்கு வேண்டிய திரவியங்களையெல்லாம் சேகரித்தார். கங்கைக் கரையில் தங்கியிருந்த வசிஷ்ட மாமுனிவரிடத்தில் சென்று, யாகத்தை நடத்தித் தரும்படி வேண்டினார்.

நிமியின் வேண்டுகோள், வசிஷ்டரைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. காரணம் – தேவேந்திரனின் யாகத்தை நடத்திக் கொடுப்பதாக வசிஷ்டர் வாக்குக் கொடுத்திருந்தார். உடனடியாகத் தம்மால் யாகத்தை நடத்த முடியாதென்று வசிஷ்டர் கூற, அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருவரும் பிரிந்தனர்.

தேவேந்திரனின் யாகத்தை நிறைவு செய்தபின்னர், நிமியின் யாகத்தை நடத்தலாம் என்று வசிஷ்டர் எண்ணியிருப்பார் போலும்! எப்படியிருந்தாலும் நீண்ட காலம் யாகம்; அது மட்டுமல்ல, இத்தகைய யாகத்தை நடத்துவதற்குத் தக்க முனிவர்களும் அவசியம்.

இதற்கிடையில், நிமி அரசர் சிந்தித்தார். தேவேந்திரன் நிகழ்த்துவிக்கிற யாகம் என்றால், சாதாரணமானது அன்று. நீண்ட காலம் பிடிக்கும். உலக மக்களுக்காகத் தான் நடத்துவிக்கிற யாகத்தைக் கால தாமதம் செய்தால், மக்களுக்குக் கிடைக்கிற நன்மைகளும் தாமதப்படும். எனவே என்ன செய்யலாம் என்று யோசித்தார். கவுதம மாமுனிவரை அணுகினார். தபோவலிமையிலும் மந்திர சித்தியிலும் வசிஷ்டருக்கு நிகரானவர் கவுதமர். அவரும் சம்மதிக்க, யக்ஞம் தொடங்கியது.

ஏறத்தாழ யக்ஞம் நிறைவடைகிற காலகட்டம். தேவேந்திரனின் யாகத்தை நிறைவு செய்துவிட்டு, நிமி காத்திருப்பாரே என்னும் எண்ணத்துடன் வசிஷ்டர் வந்தார். காத்திருக்கவில்லை என்பது தெரிந்தவுடன் சினம் வந்தது (வசிஷ்டருக்குக்கூட சினம் வருமா என்று தோன்றுகிறது, இல்லையா? அதிசயத்தில் அதிசயமாக வசிஷ்டருக்கும் கோபம் வந்தது).

இதில் ஒரு சின்ன சிக்கல். நிமி சற்றே சிந்திக்காமல் செய்துவிட்ட செயலால் வந்த சிக்கல். நிமிக்கும் இட்சுவாகு குலத்தினருக்கும் வசிஷ்டரே குலகுரு. அரசரே இல்லாமல்கூட நாடு இருக்கலாம்; ஆனால், குலகுரு ஒதுக்கப்படவோ, உதாசீனப்படுத்தப்படவோ கூடாது. குலகுரு இருக்கையில், முடியாது என்று மறுதலிக்காமல் உடனடியாக முடியாது என்பதை மட்டுமே எடுத்துக் கூறியிருந்த நிலையில், இன்னொரு குருவை நிமி நாடியது வசிஷ்டரைக் கோப்பட வைத்தது. இதுகூட முக்கியமன்று; தம்மிடம் அனுமதி பெற்று இன்னொருவரை நாடியிருந்தால்கூட பாதகமில்லை. அதுவும் செய்யவில்லையே! தமக்குச் சொல்லவே இல்லையே.

நிமியைத் தேடி வந்தபோது, நிமி வேறெங்கோ இருந்தார். முனிவரை வரவேற்க வரவில்லை. குலகுருவை வரவேற்பதற்கும் அரசர் வராமல், யாகத்திற்கும் வேறு யாரையோ வைத்துச் செய்து விட்டபடியால், வசிஷ்டரின் கோபம் எல்லை கடந்தது. நிமிக்குச் சாபம் கொடுத்துவிட்டார் – 'உன் உடலை இழப்பாய்; உன் சரீரம் இப்போதே விழுந்துவிடும். நீ தேகம் அற்றவன் ஆவாய்.'

எல்லோரும் தவித்தார்கள். மாமுனிவர் வந்திருப்பதை அறிந்து ஓடோடி வந்த அரசர், தள்ளாடிக் கீழே விழுந்தார். அமைச்சர்களும் பிறரும் வேண்ட, வேறு ஏதாவது தவசீலர் இதனை ஏற்றுக் கொண்டால், நிமியின் உடல் காப்பாற்றப்படும் என்று விமோசனமும் கொடுத்தார் வசிஷ்டர்.

ஆனால், குருவின் சாபத்தைத் தானே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிய நிமி, அப்படியே கரைந்து வீழ்ந்தார். ஆமாம், அவருடைய உடல் உடனடியாக உதிர்ந்தது.

நிமியின் யாகத்தில் பங்கேற்றிருந்த ரித்விக்குகள் தவித்தார்கள். கவுதமர் துக்கத்தில் ஆழ்ந்தார். தேவர்கள் திகைத்தனர்; ஏன், வசிஷ்டரும்கூடத் தடுமாறினார்.

தேகம் இல்லாத நிலையிலும் நிமியின் ஜீவன், தேவியைச் சரண் புகுந்தது. 'அம்மா, எல்லோருக்கும் நன்மையைக் கொடு தாயே' என்று வேண்டியது.

பல்லாண்டுகளாக அம்பிகை உபாசகராக இருந்திருந்த நிமியின் ஜீவனிடம் அம்பிகை உரையாடினாள்.

அம்பிகை: மகனே, உன்னுடைய எண்ணங்கள் நல்லவை. இருப்பினும், குருவை உதாசீனம் செய்ததால், அந்த வினைப் பயன் பீடித்தே தீரும்.

நிமி: உணர்ந்தேன் அன்னையே.

அம்பிகை: மகனே, இருந்தாலும் உன்னுடைய பக்தியால் வசப்பட்டுவிட்டேன். உனக்கு மீண்டும் தேகத்தைத் தர விழைகிறேன்.

நிமி: வேண்டாம் அம்மா. குருவை எவ்வாறு மதிக்கவேண்டும் என்பதை என்னைப் பார்த்து உலகம் புரிந்துகொள்ளட்டும். காற்றிலேயே அடியேன் வாசம் செய்ய விரும்புகிறேன்.

அம்பிகை: உன்னாசை அதுவானால் அப்படியே ஆகட்டும். ஆனாலும், வேறேதும் கேள் மகனே.

நிமி: அம்மா, முறையான பார்வை, விகல்பமில்லாத ஞானப் பார்வை அனைவருக்கும் கிட்டவேண்டும். அருள் என்பதும் நன்மை என்பதும் காலத்தின் சுழற்சிக்குள் கட்டுப்பட்டவை அல்ல என்பதை உணராமல், குறுகிய காலம், நீண்ட காலம் என்றெல்லாம் கணக்குப் போட்டுவிட்டேன். குருவின் அருள் காலத்தையே மாற்றிவிடும் என்பதை உணராமல் போய்விட்டேன். அடியேன் செய்த அவசரத்தால், கவுதம மாமுனிவருக்கும் கூட சங்கடத்தைத் தந்துவிட்டேன். கோபமே வராத வசிஷ்டரையும் கோபப்பட வைத்துவிட்டேன்.

இவ்வாறெல்லாம் வருத்தப்பட்ட நிமி அரசர், நிறைவாக ஒன்றை யாசித்தார்.

'அம்மா, எல்லோருக்கும் முறையான பார்வை இருக்கவேண்டும். அவசரப் பார்வை கூடாது. எனவே, எல்லோருடைய கண்களிலும் வாசம் செய்து, பார்வைகளை முறைப்படுத்த விரும்புகிறேன்.'

தன்னுடைய அன்பு மகனுக்கு அருள் வழங்காமல், அன்னை விட்டுவிடுவாளா?

உலகிலுள்ள அனைத்து உயிர்கள், மனிதர்கள், விலங்குகள் என்று அசையும் உயிர்கள் அனைத்தின் கண்களிலும் நிமி வாசம் செய்யும்படியான வரத்தை அம்பிகை நல்கினாள். உலக நன்மையை வேண்டிய அரசர் என்பதாலும், உலகத்திற்கான யாகம் என்றே அவசரப்பட்டதாலும், உலகிலுள்ள உயிர்களின் கண்களில்தாம் நிமி வாசம் செய்வார்; தேவர்களின் கண்களில் வாசம் செய்ய மாட்டார் என்றும் அருளினாள்.

நிமி வாசம் செய்வதாலேயே, கண் இமைகளைக் கொட்டி, அதாவது, திறந்து மூடுவது நமக்கு சாத்தியமாகிறதாம். நமக்கெல்லாம் இமை கொட்டுவது இயற்கை. ஆனால், தேவர்களால் கண்களைக் கொட்டமுடியாது (இந்தத் தகவலைப் பல இடங்களில் பல நிலைகளில் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், இல்லையா?)

'நிமேஷ, நிமிஷ' என்னும் வடமொழிச் சொற்களுக்குக் கண்கொட்டுதல், கண் கொட்டுகிற நேரம் என்றே பொருள்கள் உண்டு. கண் சிமிட்டித் திறப்பதை நிமேஷம் என்றும் கண் மூடுவதை உன்மேஷம் என்றும் குறிப்பிடுவார்கள்.

முனிவர்களின் சினத்திற்கு ஆளாகும் அளவுக்குப் போய்விட்டால்கூட, பணிந்து அம்பிகையை வணங்கினால், எப்படியாவது அருளை வழங்கிவிடுவாள்.

இந்தச் சம்பவம் இப்படித்தான் நிகழ்ந்ததா, வசிஷ்டர் கோபப்பட்டாரா, 500 ஆண்டுகள் யக்ஞமா என்றெல்லாம் சிந்தனையைத் திசை திருப்புவதைக் காட்டிலும், அம்பாளின் அருளைச் சிந்திப்பதுதான் உசிதம். கூடுதல் தகவல்கள் வேண்டுமா?

உலக நன்மைக்காகவும், பணிவிற்காகவும் உடலைத் துறந்ததால், நிமி மன்னருக்கு 'விதேகர்' (தேகத்திற்கு அப்பாற்பட்டவர்) என்னும் பெயர் ஏற்பட்டு, நாட்டிற்கும் அதுவே நிலைத்தது. இந்த விதேக நாடுதான், சீதையின் தந்தை ஜனக மன்னர் ஆண்ட நாடு. எனவேதான், சீதைக்கும் வைதேகி (விதேக இளவரசி) என்று பெயர். நிமியின் வம்சம் அப்படியே நசித்து விடுமே என்ன செய்வது? அம்பிகையே அருள் பாலித்தாள். நிமியின் உடல் விழுந்த பகுதியை, மண்ணை, நிலத்தை அரணிக் கட்டையை வைத்துக் கடையச் சொன்னாள். அவ்வாறு செய்தபோது. அந்த இடத்தில், நிமியைப் போன்றே தோற்றத்தோடு இளைஞன் ஒருவன் தோன்றினான். நிமியின் புதல்வனாக, அரணிக் கட்டையின் கடைசலில் தோன்றியதால், அதாவது மதனத்தில் தோன்றியதால் 'மிதி' என்றழைக்கப்பட்டான். இவன் வழியாக வம்சம் தொடர்ந்தது. இவன் ஆட்சி செலுத்திய பகுதி, மிதியின் பகுதி என்பதாக, மிதிலை என்றழைக்கப்படலானது. மிதிலையின் இளவரசி என்பதால், சீதைக்கு மைதிலி என்றும் பெயர் வந்தது.

மக்களின் நன்மைக்காகத் தன்னையே கரைத்துக் கொண்ட மன்னர் என்பதால், நிமி அரசருக்கு, (பிரஜைகளின்) தந்தை என்னும் பொருளில் 'ஜனகர்' என்று பெயர் ஏற்பட்டது. இந்தப் பெயர் அந்தக் குலத்தின் மன்னர்கள் யாவருக்கும் தொடர்ந்தது.

நடக்குமா? அம்பிகையின் அருள் இருந்தால், என்னதான் நடக்காது?

தொடர்புக்கு:- sesh2525@gmail.com

Tags:    

Similar News

பயமே ஜெயம்!