செய்திகள் (Tamil News)

8 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் - சாதிப்பாரா? சறுக்குவாரா?

Published On 2018-06-05 15:37 GMT   |   Update On 2018-06-05 15:37 GMT
2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் வங்காளதேச அணிக்கு எதிராக கடைசியாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம்பெற்றுள்ளார். #DineshKarthik

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேனாக இருக்கும் இவர் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். கடந்த 2004-ம் ஆண்டு மும்மையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 19 வயதில் தினேஷ் கார்த்திக் அறிமுகமானார்.

அதன்பின்னர், தோனி இந்திய அணிக்குள் நுழைந்ததும் அவரது சிறப்பான செயல்பாட்டால் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பராக தோனி இருக்கும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரை சேர்க்க அணி நிர்வாகம் விரும்பவில்லை.

கடைசியாக 2010-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான போட்டி தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி டெஸ்ட்  ஆகும். அதன் பின்னர், இம்மாதம் 14-ம் தேதி பெங்களூரில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அவர் விளையாட உள்ளார். முதலில் விருத்திமான் சாஹா தேர்வாகியிருந்தார்.

காயம் காரணமாக அவர் விலகவே தினேஷ் கார்த்திக்கு அந்த வாய்ப்பு வந்துள்ளது. மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதில், 16 போட்டிகள் விக்கெட் கீப்பராகவும், மீதமுள்ள போட்டிகளில் பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளார்.

23 டெஸ்ட்டில் ஆயிரம் ரன்களை எடுத்துள்ள அவர் ஒரு சதம் மற்றும் 7 அரைச்சதம் எடுத்துள்ளார். 51 கேட்ச் மற்றும் 5 ஸ்டெம்பிட் எடுத்துள்ளார். 2004-ம் ஆண்டில் தினேஷ் கார்த்திக் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான அதே சமயத்தில், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா 117 போட்டிகளிலும், இலங்கையின் ஹெராத் 89 போட்டிகளிலும், ஸ்டெய்ன் 86 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். 

கடந்த இரண்டாண்டுகளில் நடந்த 17 உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 3 சதங்களுடன், 8 அரைச்சதங்கள் எடுத்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 
Tags:    

Similar News