செய்திகள்

இங்கிலாந்து முத்தரப்பு தொடர்- இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா ஏ அணி அபார வெற்றி

Published On 2018-06-19 19:53 GMT   |   Update On 2018-06-19 19:53 GMT
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடருக்கான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #INDA
இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது.

இதற்கு முன்னோட்டமாக இந்தியா ‘ஏ’ அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி லெய்செஸ்டர்ஷைர் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 458 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்களான பிரித்வி ஷாவும் மயங்க் அகர்வாலும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 221 ஆக இருந்தபோது பிரித்வி ஷா அவுட்டானார். அவர் 90 பந்துகளில் 3 சிக்சர், 20 பவுண்டரியுடன் 132 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மறுபுறம் நிலைத்து நின்று சதமடித்த மயங்க் அகர்வால் 106 பந்துகளில் 5 சிக்சர், 18 பவுண்டரியுடன் 151 ரன்களில் காயத்துடன் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ஷுப்மான் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 54 பந்துகளில் 86 ரன்களை எடுத்தார்.

இறுதியில், இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 458 ரன்கள் எடுத்துள்ளது. தீபக் ஹூடா 38 ரன்களுடனும், குருணால் பாண்ட்யா 4 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.



லெய்செஸ்டர்ஷைர் அணி சார்பில் அடிக் ஜாவித் 2 விக்கெட்டும், ஜேம்ஸ் டிக்கென்சன், ஹாரி பனெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லெய்செஸ்டர்ஷைர் அணி களமிறங்கியது. 

அந்த அணியின் கேப்டன் டாம் வெல்ஸ் மட்டும் தாக்குப் பிடித்து 62 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் லெய்செஸ்டர்ஷைர் அணி 40.4 ஓவரில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா ஏ அணி சார்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, தீபக் ஹூடா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, இந்தியா ஏ அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#IndiaA #Leicestershire
Tags:    

Similar News