செய்திகள்

2,250 அணிகள் பங்கேற்கும் ஈஷா கபடி போட்டிகள் நாளை தொடக்கம்

Published On 2018-11-09 11:04 GMT   |   Update On 2018-11-09 11:04 GMT
ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தும் கபடி போட்டி நாளைத் தொடங்குகிறது.
சென்னை:

2018-ம் ஆண்டுக்கான 14-வது ஈஷா கிரா மோத்ஸவ விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் கட்ட கைப்பந்து மற்றும் எறிப்பந்து போட்டிகள் நிறவடைந்துள்ளன.

இந்த நிலையில், ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தும் கபடி போட்டிகள் நாளை (10-ந்தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிகள் மாவட்டம், மண்டலம், மாநிலம் என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 10, 11, 17, 18 ஆகிய தேதிகளில் 32 மாவட்டங்களிலும் நடைபெறும்.

இதையடுத்து, கோவை, வேலூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்படும். மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் டிசம்பர் 8-ந்தேதி மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த கபடி போட்டியில் 2,250 கிராமப்புற அணிகளும், 27 ஆயிரம் வீரர்-வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். மொத்தம் ரூ. 20 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

ஆண்களுக்கான போட்டியில் மாநில அளவில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 2 லட்சம், ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படும்.

இதேபோல், பெண்களுக்கான போட்டியில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கும் முறையே ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படும்.

இதுதவிர, மண்டலம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
Tags:    

Similar News