செய்திகள்
கே.எல். ராகுல்

86 இலக்கை 6.3 ஓவரில் எட்டி இந்தியா அபார வெற்றி: ரன்ரேட்டை வெகுவாக உயர்த்தியது

Published On 2021-11-05 16:22 GMT   |   Update On 2021-11-05 16:22 GMT
கே.எல். ராகுல், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்காட்லாந்துக்கு எதிரான 86 இலக்கை 6.3 ஓவரில் எட்டி இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12, குரூப்-2 லீக் ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 85 ரன்னில் சுருண்டது. இந்த அணி சார்பில் முகமது ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெடும் வீழ்த்தினர்.

பின்னர் 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 7.1 ஓவரில் இலக்கை எட்டினால், இந்தியாவின் ரன்ரேட் அதிக அளவில் உயரும் என்ற நிலை இருந்ததால் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் ஓவரில் ரோகித் சர்மா 1 பவுண்டரி அடிக்க 8 ரன்கள் கிடைத்தது. 2-வது ஓவரில் கே.எல். ராகுல் 2 பவுண்டரி விரட்ட 15 ரன்கள் கிடைத்தது. 3-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது.

4-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு இமாலய சிக்ஸ் விளாசியதுடன், இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைக்க, இந்தியா 3.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது.

5-வது ஓவரில் கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேறினார். அவர் 16 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார். இந்தியா 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

6-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்த கே.எல். ராகுல் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 18 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

7-வது ஓவன் 3-வது பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்சருக்கு தூக்க இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 89 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Tags:    

Similar News