பிரிஜ் பூஷன் சிங் வழக்கில் குற்றப்பத்திரிகை... விளையாட்டு துறைக்கு கருப்பு தினம்: காங்கிரஸ் கடும் தாக்கு
- பிரிஜ் பூஷன் சிங் மீது சிறுமி அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
- முழு அரசு எந்திரமும் பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முடுக்கி விடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராடி வந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், 18 வயதுக்குட்பட்ட சிறுமி, பிரிஜ் பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
இன்று இந்திய விளையாட்டுத்துறைக்கு ஒரு, "கருப்பு தினம்". இந்த நாட்டின் சட்ட அமைப்பு பா.ஜ.க.வின் அரசியல் புல்டோசரின் கீழ் நசுக்கப்பட்டு, இந்திய மகள்களின் நீதிக்கான கூக்குரல் குப்பைதொட்டியில் போடப்பட்டு புதைக்கப்பட்டு விட்டது. முழு அரசு எந்திரமும் ஒரு சர்வாதிகாரிக்கு வேண்டிய பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சட்டத்தால் தொட முடியாதவர்கள் என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதிமன்றம் அந்த மகள்களுக்கு தகுந்த நீதியை வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா சிரினாடே கூறியிருப்பதாவது:
ஒரு சிறுமி, மிகப் பெரிய பதவியில் உள்ள இந்திய மல்யுத்த பயிற்சியாளரான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் புகார் அளித்திருக்கிறார். இதற்காக டெல்லியில் ஒரு நீண்ட போராட்டம் நடைபெற்று, மோடி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருந்ததால் போராட்டத்தையும் கைவிட்டனர்.
இந்நிலையில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் சிறுமி அளித்த புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்து அவர் மீது போக்சோ சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
புகார் அளித்த உடனேயே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதற்கு மாறாக அவர் 45 நாட்கள் சுதந்திரமாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். காவல்துறை, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள என அனைவரும் அந்த சிறுமிக்கு எதிராகவும், பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு அவரை பாதுகாத்திருக்கின்றனர். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இது குறித்து வாயே திறக்கவில்லை. பா.ஜ.க. வின் தற்போதைய முழக்கம், "பெண் குழந்தையை தொந்தரவு செய்வோம், பூஷனை காப்பாற்றுவோம்" என்பதாக மாறியிருக்கிறது.
45 நாட்களாக ஏன் பூஷன் விசாரிக்கப்படவில்லை என்றும், குற்றவியல் நடுவர் முன்பு வாக்குமூலம் எந்த சூழ்நிலையில் மாறியது என்றும் நீதிமன்றங்கள் விசாரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போதெல்லாம் குற்றவாளிக்கு ஆதரவாகத்தான் பா.ஜ.க. செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.