கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். ஏலம் எங்கே... இரண்டு இடங்களை குறிவைக்கும் பிசிசிஐ

Published On 2024-10-07 01:45 GMT   |   Update On 2024-10-07 01:45 GMT
  • துபாய் அல்லது சவுதி அரேபியாவில் மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு.
  • அதிகாரப்பூர்வமாக இதுவரை ஏலம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்யவில்லை.

உலகின் மிகப்பெரிய பணக்கார டி20 லீக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) திகழ்ந்து வருகிறது. 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

மெகா ஏலத்தை பொதுவமாக வெளிநாடுகளில் நடத்த பி.சி.சி.ஐ. விரும்புகிறது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்றது. இந்த வருடம் லண்டன் (இங்கிலாந்து), துபாய் அல்லது சவுதி அரேபியா ஆகிய மூன்று இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்தது.

நவம்பர் மாதம் இறுதியில் மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதம் லண்டனில் (இங்கிலாந்து) குளிர்காலம் என்பதால் அதை பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.

துபாய் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். துபாயை விட சவுதி அரேபியாவில் செலவு அதிகம் எனக் கூறப்படுகிறது. 10 அணிகளும் ஒரு குழுவுடன் செல்லும். அவர்களுக்கு ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு அதிக செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மீண்டும் துபாயில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த இடம் என அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் ஆறு வீரர்களை (Right-To-Match option- உடன்) தக்கவைத்துக் கொள்ள முடியும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. முதல் வீரரை 18 கோடி ரூபாய்க்கும், 2-வது வீரரை 14 கோடி ரூபாய்க்கும், 3-வது வீரருக்கு 11 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துக் கொள்ள முடியும். 4-வது வீரரை 18 கோடி ரூபாய்க்கு உள்ளேயும், 5-வது வீரரை 14 கோடி ரூபாய்க்கு உள்ளேயும் தக்கவைத்துக் கொள்ள முடியும். uncapped வீரரை 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News