டி20 மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் கையில் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு
- 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
- இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது.
10 அணிகள் இடையிலான 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் (ஏ பிரிவு) மோதியது.
இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது.
இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது. ஏ பிரிவில் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் கடைசி லீக்கில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் சிக்கலின்றி 2-வது அணியாக நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறி விடும்.
பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும். அதாவது இந்திய அணியின் தலைவிதி இப்போது பாகிஸ்தான் கையில் உள்ளது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் மோதியுள்ள பாகிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இனி எங்கள் கையில் எதுவும் இல்லை. எங்களுக்கு இன்னொரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்' என்றார்.