2வது டெஸ்டிலும் வெற்றி: இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது இங்கிலாந்து
- இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இலங்கை அணி 2வது இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 40 ரன்னிலும், ஹாரி புரூக் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இங்கிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரை சதமடித்து 74 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 231 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் வீரர்கள் விரைவாக ரன் எடுக்க முயன்றனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 34வது சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் 58 ரன்னும், தனஞ்செய டி சில்வா 50 ரன்னும் எடுத்தனர். பிரியநாத் ரத்நாயகே 43 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.