கிரிக்கெட் (Cricket)

கான்பூர் டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழந்து தடுமாறிய வங்கதேசம்

Published On 2024-09-30 12:19 GMT   |   Update On 2024-09-30 12:19 GMT
  • மழை காரணமாக போட்டியின் இரண்டு, மூன்றாம் நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்டன.
  • இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களை எடுத்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) துவங்கியது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளிலேயே மழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்திருந்தது.

 


இதைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் மழை, ஆடுகளம் ஒத்துழைக்காத காரணங்களால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. இன்றைய ஆட்டம் துவங்கியது முதலே இந்திய வீரர்கள் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தினர்.

இதன் காரணமாக வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை அடித்த போது, கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

வங்கதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷதாம் இஸ்லாம் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஹசன் முகமது 4 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களை எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Tags:    

Similar News