கிரிக்கெட் (Cricket)

கான்பூர் டெஸ்ட்: அதிவேக ரன்கள், அதிக சிக்ஸர்கள் என இந்தியா சாதனை மேல் சாதனை

Published On 2024-09-30 15:06 GMT   |   Update On 2024-09-30 15:06 GMT
  • இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50, 100, 150, 200, 250 ரன்களை கடந்து சாதனை படைத்தது.
  • ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) துவங்கியது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளிலேயே மழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் மழை, ஆடுகளம் ஒத்துழைக்காத காரணங்களால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. இன்றைய ஆட்டம் துவங்கியது முதலே இந்திய வீரர்கள் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தினர்.

இதன் காரணமாக வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50, 100, 150, 200, 250 ரன்களை கடந்து சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை அடித்த போது, கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 2 விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றினார்.

இப்போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தியா 3 ஓவரில் 51 ரன்களை குவித்தது. இதற்கு முன்பு இந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4.2 ஓவரில் 50 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தியா 10.1 ஓவரில் 103 ரன்களை குவித்தது. கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 12.2 ஓவரில் 100 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

3. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தியா 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்தது. கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 21.1 ஓவரில் 150 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

4. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தியா 24.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு சிட்னியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 28.1 ஓவரில் 200 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

5. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 250 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. 30.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. 2022ல் பாகிஸ்தானுக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் இங்கிலாந்து அணி 34 ஓவரில் 250 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

6. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காராவிற்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் 27000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கர் (623 இன்னிங்ஸ்) சாதனையை விராட் கோலி (594 இன்னிங்ஸ்) முறியடித்தார்.

7. டெஸ்ட் போட்டியில் தான் சந்தித்த முதல் 2 பந்துகளில் சிக்ஸர் அடித்த 4 ஆவது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 1948 இல் ஃபோஃபி வில்லியம்ஸ், 2013 இல் சச்சின் டெண்டுல்கர் மற்றும் 2019 இல் உமேஷ் யாதவ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

8. டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7 ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார். அனில் கும்ப்ளே (619), அஸ்வின் (524), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), இஷாந்த் சர்மா (311), ஜாகீர் கான் (311) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

9. 2024 ஆம் ஆண்டில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 96 சிக்ஸர்கள் அடித்துள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 89 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

Tags:    

Similar News