கிரிக்கெட் (Cricket)

வங்கதேச தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு

Published On 2024-08-15 09:42 GMT   |   Update On 2024-08-15 09:42 GMT
  • டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
  • வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இந்த இரு தொடர்களிலும் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பும்ரா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டார்.

இதற்கிடையே, வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் டெஸ்டும், செப்டம்பர் 27-ம் தேதி 2வது டெஸ்ட்டும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பி.சி.சி.ஐ. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இருந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது.

இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். உள்ளூர் போட்டியான துலீப் டிராபியில் விளையாட இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News