கிரிக்கெட் (Cricket)

ஐசிசி தலைவராகிறார் ஜெய்ஷா

Published On 2024-08-21 06:05 GMT   |   Update On 2024-08-21 06:05 GMT
  • ஐ.சி.சி. சேர்மன் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதியாகும்.
  • ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கிறார் என்று தெரிகிறது.

புதுடெல்லி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது. 3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் ஐ.சி.சி.யின் சேர்மனாக ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி. சேர்மன் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதியாகும். ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கிறார் என்று தெரிகிறது. டிசம்பர் மாதம் 1-ந்தேதி ஐ.சி.சி. புதிய சேர்மனாக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார், என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அவர்கள் வழியில் ஜெய்ஷா இணைகிறார். இளம் வயதில் ஐ.சி.சி. சேர்மன் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்கிறார். அவருக்கு 34 வயதாகிறது.

Tags:    

Similar News