கிரிக்கெட் (Cricket)

2-வது போட்டிதான்..வான்கடே மைதானமும் ரோகித்- ஜடேஜாவும்.. டெஸ்ட்டில் சுவாரஸ்ய தகவல்

Published On 2024-11-01 05:32 GMT   |   Update On 2024-11-01 05:32 GMT
  • வான்கடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்டில் ரோகித் சர்மா களமிறங்கியுள்ளார்.
  • ரோகித் சர்மா 64 டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா 76 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

மும்பை:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி பும்ரா இல்லாமல் களமிறங்கி உள்ளது.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்டில் ரோகித் சர்மா களமிறங்கியுள்ளார். தனது 64-வது டெஸ்டில் விளையாடும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வான்கடே மைதானத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார். 2013-ல் இருந்து தொடர்ந்து விளையாடும் அவர் மும்பையில் ஒரு டெஸ்டில் கூட விளையாடவில்லை.

இதேபோல சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு இது 2-வது டெஸ்ட் போட்டியாகும். ரோகித்துக்கு 11 மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி, அவரை விட 13 டெஸ்ட் போட்டிகள் அதிகமாக விளையாடிய போதிலும் மும்பையில் ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார்.

2013-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டிலும் 2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. ரோகித் சர்மா 64 டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா 76 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

Tags:    

Similar News