மொத்த இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக பண்ட் இருப்பார்- கங்குலி
- ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்குவார்.
- 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரிஷப் பண்டை பார்க்கிறேன். அதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு அவர் திரும்பியதில் (வங்காளதேசத்துக்கு எதிரான தொடர் 19-ந்தேதி தொடக்கம்) ஆச்சரியமில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால், ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்குவார். அதே சமயம் அவர் குறுகிய வடிவிலான போட்டிகளில் (20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி) முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பல போட்டிகளை தவற விட்டுள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் அதற்குள் அவர் அணிக்கு திரும்ப வேண்டும். இந்த தொடரை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்திய அணிக்கு உண்மையான சவால் அளிக்கக்கூடிய போட்டியாக இது இருக்கும். அடுத்த ஆண்டு ஜூலையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு தொடர்களும் நமக்கு முக்கியமானது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது சிராஜ் இருக்கிறார்கள். ஷமியும் இணையும் போது பந்துவீச்சு மேலும் வலுவடையும். ஆகாஷ் தீப் திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசுகிறார். கவனிக்கத்தக்க ஒரு பவுலராக இருக்கிறார்.
வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சென்று அவர்களை இரு டெஸ்டிலும் வீழ்த்தியது எளிதான விஷயமல்ல. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் இந்திய அணி முற்றிலும் வித்தியாசமானது. உள்நாடோ, வெளிநாடோ எல்லா இடத்திலும் சிறப்பாக ஆடக்கூடியது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. எனவே வங்காளசேதம் இந்திய மண்ணில் வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் பாகிஸ்தானை அவர்களது இடத்தில் தோற்கடித்த நம்பிக்கையுடன் வருவதால் இந்த முறை வங்காளதேசத்திடம் இருந்து கடினமான போட்டியை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
26 வயதான ரிஷப் பண்ட் இதுவரை 33 டெஸ்டுகளில் விளையாடி 5 சதம் உள்பட 2,271 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.