ஒருநாள் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் சாதனையை சமன்செய்த ரோகித்
- இந்தியாவுக்கு எதிராக இலங்கை தொடரை கைப்பற்றியது.
- இந்த போட்டியில் ரோகித் சர்மா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 35 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிக்சரை பறக்கவிட்டதன் மூலம் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இரண்டாவது வீரர் எனும் கிறிஸ் கெயில் சாதனையை தற்போது ரோகித் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார்.
இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் 257 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 331 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 301 போட்டிகளில், 294 இன்னிங்ஸ்களில் 331 சிக்சர்களை விளாசியுள்ளார். மேலும் இப்பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் விரர் ஷாஹித் அஃப்ரிடி 351 சிக்சர்களுடன் முதல் இடத்த்ல் நீடித்து வருகிறார்.