கிரிக்கெட் (Cricket)

அபார பந்துவீச்சால் 2வது டெஸ்டில் வெற்றி: நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை

Published On 2024-09-29 08:50 GMT   |   Update On 2024-09-29 13:33 GMT
  • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 602 ரன்கள் குவித்து டிக்ளேர்.
  • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 88 ரன்னும், 2வது இன்னிங்சில் 360 ரன்னிலும் சுருண்டது.

காலே:

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

சண்டிமல் (116), கமிந்து மெண்டிஸ் (182 நாட்அவுட்), குசால் மெண்டிஸ் (106 நாட்அவுட்) ஆகியோர் சதம் விளாசினர்.

அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. சான்ட்னர் 29 ரன்கள் எடுத்தார்.

இலங்கையின் பிரதாப் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

514 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே அரை சதமடித்து 61 ரன் எடுத்தார். கேன் வில்லியம்சன் 46 ரன் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 78, சான்ட்னர் 67, டாம் பிளெண்டல் 60 ரன்னும் எடுத்து போராடினர்.

இறுதியில், நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 360 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றதுடன் 2-0-என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இலங்கை அணி சார்பில் நிஷான் பெய்ரிஸ் 6 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகனாக கமிந்து மெண்டிசும், தொடர் நாயகனாக பிரபாத் ஜெயசூர்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News