விராட் கோலி இந்திய அணியில் இருக்கும் ஆஸ்திரேலியர்- சுமித்
- விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் அப்படியே ஆஸ்திரேலியர்களை போன்று இருக்கிறது.
- சவால்களை எதிர்கொண்டு எதிரணியை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பது என அனைத்தும் ஆஸ்திரேலிய வீரர்களை நினைவூட்டுகிறது.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் நவ.22-ந் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் அளித்த ஒரு பேட்டியில், 'விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் அப்படியே ஆஸ்திரேலியர்களை போன்று இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர் போட்டிக்கு தயாராகும் விதம், சவால்களை எதிர்கொண்டு எதிரணியை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பது என அனைத்தும் ஆஸ்திரேலிய வீரர்களை நினைவூட்டுகிறது. அவர் இந்திய அணியில் இருக்கும் ஆஸ்திரேலியர் என்று நினைக்கிறேன்.
இந்த தொடரில் நான் விராட் கோலிக்கு எதிராக வரிந்துகட்டுவதில் கவனம் செலுத்தப் போவதில்லை. களம் இறங்கி முடிந்த வரை அதிக ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். நானும் விராட் கோலியும் அவ்வப்போது குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்வோம். கோலி ஒரு நல்ல மனிதர் மற்றும் அற்புதமான வீரர். அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பாக இருக்கும்' என்றார்.