விளையாட்டு

36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை நிறைவேற்றுவாரா மெஸ்சி

Published On 2022-12-17 08:45 GMT   |   Update On 2022-12-17 08:45 GMT
  • உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார்.
  • மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

உலகின் தலை சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி கிளப் போட்டிகளில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார். அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் 32 வயதான அவருக்கு நீண்ட காலமாக இருக்கிறது.

2014-ல் இறுதிப்போட்டி வரை வந்து ஜெர்மனியிடம் தோற்று உலக கோப்பையை இழந்தார்.

கடந்த ஆண்டு பிரேசிலை வீழ்த்தி கோபா அமெரிக்கா கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு பெருமை சேர்த்தார். 28 ஆண்டு கனவை நனவாக்கினார். அதே போன்று மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை அவர் நிறைவேற்றுவாரா என்ற எதிர் பார்ப்பும் இருக்கிறது.

உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார். இதனால் உலக கோப்பையுடன் அவர் வெளியேறுவாரா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலக கோப்பையில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருக்கிறது. தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 5 கோல்கள் அடித்துள்ளார். 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பந்தை கடத்தி செல்லும் விதம் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.

வீரர்களை ஏமாற்றி பந்தை கொண்டு செல்வதில் அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை இந்த தொடரில் அவர் பல ஆட்டத்தில் நிரூபித்து காட்டியுள்ளார். குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது கோல் அடிக்க மெஸ்சி பந்தை கொண்டு சென்ற விதம் மிகவும் அபாரமாக இருந்தது.

தேவைக்கு ஏற்ப வேகமாக ஓடுவது, பந்தை எதிர் அணி வீரர்களின் காலுக்கு இடையில் அடித்து கொண்டு செல்வது என்பது உள்பட பல்வேறு மேஜிக்கை வெளிப்படுத்தி வருகிறார்.

உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்தார். அவர் 11 கோல்கள் அடித்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் கோல் அடித்ததன் மூலம் அவர் பாடிஸ்டுடாவை (10 கோல்) முந்தினார்.

உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மெஸ்சியின் கனவு நனவாகுமா? என்று அர்ஜென்டினா ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்.

Tags:    

Similar News