தமிழ்நாடு

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் 126 சிறப்பு அழைப்புகள்- அண்ணாமலை

Published On 2024-01-21 08:39 GMT   |   Update On 2024-01-21 08:39 GMT
  • பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பை ராமநாதபுரம் மக்கள் கொடுத்தனர்.
  • சைவமும், வைணவமும் சேர்ந்ததுதான் சனாதன தர்மம்.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் புனித யாத்திரை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்று அவர் பத்தாவது நாள் விரதத்தில் உள்ளார். இந்த பதினோரு நாள் பிரதமர் விரதத்தில் கடைசி நாட்கள் தமிழகத்திற்கு வந்திருப்பது மிக சிறப்பாக உள்ளது.

பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பை ராமநாதபுரம் மக்கள் கொடுத்தனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் முதல்வர் இல்லம் உள்ளிட்ட 126 சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அனைவரும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வார்கள் என்று நினைக்கிறேன்.


கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட 55 மத வழிபாடு தளங்களை நாளை தமிழகத்தில் சுத்தம் செய்கிறோம். அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து தளங்களிலும் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ராமர் என்ற உணர்வு தமிழக மண்ணில் கலந்திருக்கிறது. ராமரை தமிழக மண்ணில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.

சைவமும், வைணவமும் சேர்ந்ததுதான் சனாதன தர்மம். இதனை யார் எதிர்க்கிறார்களோ அப்போது அதன் பெருமை மேலும் அதிகரிக்கும். ராமேசுவரம் கோவிலுக்கு பிரதமர் வருகையொட்டி முழுமையாக அறநிலை துறை ஒத்துழைப்பு தந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News