பயிற்சி பெண் டாக்டர் படுகொலை- 400 தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தம்
- இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள், மாணவர்கள் பல்வேறு அமைப்பினர் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 400 மருத்துவமனைகள், 2 ஆயிரம் மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பாக தனியார் மருத்துவமனை முன்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று தீவிர சிகிச்சை பிரிவு தவிர மற்ற அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் நடைபெறவில்லை.
இதனால் இன்று அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணி புரிந்து வருகின்றனர்.