செய்திகள் (Tamil News)
ஆனந்தகுமார்

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு: அ.தி.மு.க.வில் இருந்து பாசறை செயலாளர் விலகல்

Published On 2017-02-08 04:52 GMT   |   Update On 2017-02-08 04:52 GMT
திண்டுக்கல் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆனந்தகுமார் அ.தி.மு.க.வில் இருந்து விலகினார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆனந்தகுமார். இவர் நேற்று இரவு தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக நான் அ.தி.மு.க.வின் விசுவாசியாக இருந்து வருகிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு திண்டுக்கல் மாவட்ட பாசறை செயலாளர் பதவியை வழங்கினார். அதுமுதல் எனது பணியை சிறப்பாக செய்து வந்தேன். அவரது மறைவுக்கு பிறகும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் விருப்பபடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தபோது ஏற்றுக் கொண்டேன். ஆனால் சமீப காலமாக அவரது நடவடிக்கை எனக்கு வியப்பை அளித்து வருகிறது.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு தனது மனகுமுறலை வெளியிட்டபிறகு ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி யாரும் இனி அ.தி.மு.க.வில் இருக்க முடியாது. சசிகலாவின் தலைமையையும் ஏற்க முடியாது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர்தான் முதல்-அமைச்சராக வர முடியும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து முற்றிலும் உண்மையானது. எனவே வேறு யாரையும் முதல்- அமைச்சராக நினைக்க முடியவில்லை. எனவே நான் அ.தி.மு.க.வில் இருந்தும் எனது கட்சி பதவியில் இருந்தும் விலகுகிறேன் என்று தெரிவித்தார்.

Similar News