செய்திகள் (Tamil News)

செய்யாறில் கள்ளக்காதல் தகராறில் 2-வது மனைவி தூக்கில் தொங்க விட்டு கொலை: கணவர் சரண்

Published On 2017-04-06 12:22 GMT   |   Update On 2017-04-06 12:22 GMT
கள்ளக்காதல் தகராறில் 2-வது மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு நாடகம் ஆடிய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த விலாநல்லூர் கிராமம் புதூர் நகரை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் முருகன் (வயது 29). விவசாயி. இவரது முதல் மனைவி நதியா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் முருகனுக்கு தரணி (27) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தரணியும் ஏற்கனவே திருமணமானவர். நெருக்கம் அதிகமானதால், தரணியை 2-வதாக முருகன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரு மனைவிகளுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதில் முருகனுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் மனைவியை ஊருக்குள் குடி வைத்தார்.

2-வது மனைவியுடன் விலாநல்லூர் அருகே செங்காடு கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் குடிசை அமைத்து சேர்ந்து வாழ்ந்தார். இந்த நிலையில், முருகன் நேற்றிரவு 2-வது மனைவியின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவர், மது போதையில் இருந்துள்ளார். வீட்டிற்குள் 2-வது மனைவி தரணியுடன் ஒரு வாலிபர் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். அவர், முருகனை பார்த்ததும் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன், ‘‘நீ நெருக்கமாக இருந்த வாலிபர் யார்? அவனுடன் உனக்கு என்ன தொடர்பு’’ என்று சந்தேகித்து மனைவி தரணியிடம் கேட்டு தகராறு செய்தார். அவர்களுக்குள் மோதல் மூண்டது.

ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முருகன், மனைவியை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தார். இதில் தரணி சுருண்டு விழுந்து மயக்கம் அடைந்தார். போதையில் இருந்த முருகன், மனைவியை தட்டி எழுப்பினார்.

நீண்ட நேரமாகியும் மனைவிக்கு மயக்கம் தெளியாததால், அடித்ததில் இறந்து விட்டாரோ? என்று நினைத்து அச்சமடைந்தார். அதன்பிறகு, வீட்டு கூரை யின் நடுப்பகுதியில் உள்ள கம்பில் மனைவியை தூக்கில் தொங்க விட்டார். அப்போது தரணிக்கு உயிர் இருந்தது. தூக்கில் தொங்கவிட்டதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்தே, மனைவியை தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து விட்டோம் என்பதை முருகன் அறிந்து அச்சமடைந்தார்.

விடிந்ததும் இன்று காலை, குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகம் ஆடினார். அவரை உறவினர்கள் நம்பவில்லை. விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து முருகன், செங்காடு கிராம நிர்வாக அலுவலர் முருகதாசிடம் சரணடைந்தார். முருகனை அனக்காவூர் போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார்.

இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News