செய்திகள் (Tamil News)
எஸ்.வி.எஸ்.குமார்

அமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த காண்டிராக்டர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு

Published On 2017-05-11 10:43 GMT   |   Update On 2017-05-11 10:43 GMT
அமைச்சர் காமராஜ் மீது மோசடி புகார் அளித்தவர் மீதும் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கீழவாழாச்சேரியை சேர்ந்த காண்டிராக்டர் எஸ்.வி.எஸ்.குமார் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ரூ. 30 லட்சம் பண மோசடி புகார் செய்திருந்தார்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீசார் கடந்த 5-ந் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் குடவாசல் தாலுகா சீதக்கமங்கலத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கலைவண்ணன் என்பவர் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் காண்டிராக்டர் குமார் மீது புகார் மனு அளித்தார்.

நான் பி.பார்ம் படித்துள்ளேன். எனக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டில் ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்தை 4 தவணைகளாக நாகராஜன் என்பவர் மூலம் காண்டிராக்டர் குமார் பெற்றுக் கொண்டார்.

பின்னர் விசா வந்து விட்டதாக கூறி என்னை அழைத்து கொண்டு சென்னை சென்றார். அங்கு சென்றதும் என்னை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.

நான் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் குமார் ஏமாற்றி வந்தார். இது குறித்து கடந்த பிப்ரவரி 25-ந்தேதி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தேன்.

இதையடுத்து குமார் என்னை தொடர்பு கொண்டு ரூ. 3½ லட்சத்துக்கு தேதியிடாத காசோலையை வழங்கி விட்டு மீதிப் பணத்தை பின்னர் தருவதாக கூறினார்.

அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. எனவே பண மோசடி செய்த குமார், நாகராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

அமைச்சர் காமராஜ் மீது மோசடி புகார் அளித்தவர் மீதும் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News