செய்திகள்
தீ வைத்து எரிக்கப்பட்ட அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

நெல்லை அருகே அரசு பஸ் தீவைத்து எரிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2018-05-15 08:05 GMT   |   Update On 2018-05-15 08:05 GMT
நெல்லை அருகே அரசு பஸ்சுக்கு தீவைத்து எரித்து தலைமறைவான மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை சந்திப்பில் இருந்து தாழையூத்துக்கு இன்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பரமசிவன் ஓட்டினார். கண்டக்டராக சின்னப்பன் என்பவர் இருந்தார். பஸ்சில் சுமார் 10 பயணிகளே பயணித்தனர்.

அந்த பஸ் தாழையூத்து தென்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வடக்கு தாழையூத்தில் ஒரு திருப்பத்தில் பஸ் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் கையில் பெட்ரோல் கேன் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பரமசிவன் பஸ்சை நிறுத்தினார். உடனே பஸ்சில் ஏறிய மர்ம நபர்களில் ஒருவர் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து பஸ்சை ஓரமாக ஓட்டி செல்லுமாறு மிரட்டினார். இதனால் பயந்து போன டிரைவர் பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தினார்.

இதையடுத்து பஸ்சில் ஏறிய மற்றொரு நபர் பயணிகளிடம் இந்த பஸ்சுக்கு தீ வைக்க போகிறோம், ஆகவே அனைவரும் இறங்கி சென்று விடுங்கள் என கூறினார். இதனால் பயணிகள் அனைவரும் பதட்டத்துடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.

இதையடுத்து மர்ம நபர்கள் 2 பேரும் பஸ்சின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். பஸ் முழுவதுமாக கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது அந்த மர்ம நபர்கள் ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் வீசியவாறும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி உடனடியாக தாழையூத்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பாளை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அரசு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார் அதிரடி படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விவரங்கள் கேட்டறிந்தார். மேலும் பஸ்சுக்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து அடையாளங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தாழையூத்து பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News