செய்திகள்

கோவையில் ஒரே ஏ.டி.எம். மையத்தில் இருந்து லட்சக்கணக்கில் திருடிய ஹை-டெக் கும்பல்

Published On 2018-06-07 07:43 GMT   |   Update On 2018-06-07 07:43 GMT
கோவையில் ஒரே ஏ.டி.எம். மையத்தில் 20 பேரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை திருடிய ‘ஹை-டெக்’ கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 20 பேரின் வங்கி கணக்கில் இருந்து நேற்று காலை அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டதாக அவர்களது செல்போனுக்கு மெசேஜ் வந்தது.

ஏ.டி.எம். டெபிட் கார்டு தங்களிடம் இருக்கும் போது பணம் எப்படி எடுக்கப்பட்டது? என்று அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். பின்னர் கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாளிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.

பணத்தை இழந்த அனைவரும் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அருகில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 2-ந் தேதி பணம் எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்கு போலீசார் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். ஆனால் தடயம் எதுவும் சிக்கவில்லை.

ஒரே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து சில மணி நேர இடைவெளியில் பணம் திருடப்பட்டுள்ளது. எனவே மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமராவை பொருத்தி டெபிட் கார்டுகள் பற்றிய தகவல்கள் மற்றும் பின் நம்பர்களை தெரிந்து கொண்டு, அதன்மூலம் போலி டெபிட்கார்டுகளை தயாரித்து பணத்தை திருடி இருக்கலாம் என கருதுகின்றனர்.

எனவே ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த 1 வாரத்தில் அந்த மையத்துக்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெங்களூரில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்து தான் 20 பேரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை என மொத்தம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணத்தை எடுத்துள்ளனர்.



போலி டெபிட் கார்டுகள் தயாரித்து லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளதால் இதில் தொழில் நுட்ப விவரங்கள் தெரிந்த ‘ஹை-டெக்’ கும்பல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது,

சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக யார், யாரிடம் இருந்து எவ்வளவு பணம் திருடப்பட்டுள்ளது என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுரிபாளையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, மைக்ரோ கேமராக்களை மர்மநபர்கள் பொருத்தியிருந்தது தெரிய வந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் 2 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தது.

ஆனால் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதே நபர்கள் இங்கும் கைவரிசை காட்டினார்களா? என விசாரணை நடந்து வருகிறது.


Tags:    

Similar News