செய்திகள்
குளச்சல் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை படத்தில் காணலாம்.

குமரியில் சூறைக்காற்றுடன் மழை - கடலில் மீன் பிடிக்கச் சென்ற முட்டம் மீனவர்கள் 4 பேர் மாயம்

Published On 2018-06-09 07:47 GMT   |   Update On 2018-06-09 07:47 GMT
முட்டம் பகுதியில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமாகி விட்டனர். இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் படகு மூலம் மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள்.
குளச்சல்:

குளச்சல் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன் பிடித் தொழில் செய்து வருகிறார்கள்.

ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீனவர்கள் மீன் பிடிக்க கடந்த மே மாதம் 31-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் கரைப்பகுதிகளில் மீன் பிடித்து வந்தனர். குளச்சல், மண்டைக்காடு, முட்டம் பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது. மேலும் கடலிலும் சூறைக்காற்று வீசியது. இதனால் பெரும்பாலான கட்டுமர, வள்ளம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

அவர்களின் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சில கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் மட்டும் அதிகாலையிலேயே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இருந்தனர். அவர்களும் கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக அவசரமாக கரை திரும்பினார்கள்.

இந்த மீனவர்களின் வலையில் குறைந்தளவே மீன்கள் சிக்கியிருந்தது.

இந்தநிலையில் முட்டம் பகுதியில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமாகி விட்டனர். மேலமுட்டம் பொன்னந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சசி (39), நடுமுட்டத்தைச் சேர்ந்த சேவியர் (50), மேலமுட்டத்தைச் சேர்ந்த ஜேசு அடிமை (20), மேலமுட்டம் ஓடைத் தெருவைச் சேர்ந்த ஸ்டெபின் (24) ஆகிய 4 மீனவர்களும் நேற்று மாலை 3 மணி அளவில் முட்டத்தில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் இன்று காலை 8 மணிக்குள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் காலை நீண்ட நேரமாகியும் இந்த 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை. இதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீனவர்கள் 4 பேர் மாயமான தகவலை அவர்கள் குளச்சல் கடலோர காவல்படை போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் படகு மூலம் மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News