செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்கியது

Published On 2018-06-20 04:19 GMT   |   Update On 2018-06-20 04:19 GMT
நேற்று 48.47 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 49.78 அடியாக உயர்ந்து இன்று இரவுக்குள் 50 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால், அங்குள்ள கபினி அணை நிரம்பியது. கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டி உள்ளது.

கபினி அணை நிரம்பியதால், பாதுகாப்பு கருதி கடந்த வாரம் அணையிலிருந்து 32ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால், கபினி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வெறும் 500 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரியில் திறந்து விடப்படுகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 32 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று 24 ஆயிரத்து 99 கனஅடியாக சரிந்தது. இன்று மேலும் குறைந்து 10 ஆயிரத்து 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது.

நீர்திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 48.47 அடியாக இருந்த நீர்மட்டம் 49.78 அடியாக உயர்ந்து உள்ளது. இன்று இரவுக்குள் 50 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்து வருவதால், கடந்த 3 நாட்களாக வேகமாக உயர்ந்து வந்த நீர்மட்டம், நாளை முதல் மெல்ல, மெல்ல உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

Tags:    

Similar News