செய்திகள்

மக்கள் சம்மதம் இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கக் கூடாது - ஜி.கே.வாசன்

Published On 2018-06-23 09:21 GMT   |   Update On 2018-06-23 09:21 GMT
மக்கள் சம்மதம் இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan #GreenWayRoad

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்கு த.மா.கா.வை தயார் படுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்கும், செயல் பாட்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது வருகிற தேர்தலில் நல்ல பலன் தரும் என்று நம்புகிறேன்.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது வரவேற்கத்தக்கது.

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைப்பதற்கு மக்களின் சம்மதத்தை பெற வேண்டியது அவசியம். பொது மக்களுக்கும், விவசாயத்துக்கும், தொழில் வளர்ச்சிக்கும் எவ்விதமான இடையூறும் இருக்கக்கூடாது.

இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பூரண சம்மதத்தை பெற வேண்டும். மக்கள் சம்மதிக்காவிட்டால் மாற்று வழி அல்லது இருக்கிற பாதையை விரிவுபடுத்துவது போன்றவற்றைத்தான் ஆலோசிக்க வேண்டும்.

புழல் சிறைக்குள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது கவலை அளிக்கிறது. சென்னையில் வழிப்பறி, கொள்ளை அதிகரித்து வருகிறது. இதில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் திருடர்கள் வருவதாக கூறப்படுகிறது. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது பிடிவாதபோக்கை கைவிட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குமா? என்ற சந்தேகமே வரக்கூடாது. அதை நிரந்தரமாக மூடுவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி மத்திய மத்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறுவது தமிழக உளவுத்துறை சரியில்லையோ என்ற கருத்தைத் தான் ஏற்படுத்துகிறது. அப்படியென்றால் அவர் மத்திய உளவுத்துறையிடம் சொல்லி அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஞானதேசிகன், சக்தி வடிவேல், ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என். அசோகன், விடியல்சேகர், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன் மற்றும் துறைமுகம் செல்வகுமார், கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.#GKVasan #GreenWayRoad

Tags:    

Similar News