செய்திகள்

குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் - கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை

Published On 2018-07-21 06:32 GMT   |   Update On 2018-07-21 06:32 GMT
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். மெயினருவியில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அனைவரும் குளித்து மகிழவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். #CourtallamFalls
தென்காசி:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. குற்றாலம் அருவிப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் பெய்தவண்ணம் இருந்துவந்தது.

அவ்வப்போது மழை பெய்துவருவதால் குளுகுளு காலநிலை நிலவுகிறது. அவ்வப்போது சூரியனின் வெளிச்சம் தலைகாட்டியபோதிலும் மலைப்பகுதிகளில் சாரல் வெளுத்து கட்டுவதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

குற்றாலத்தில் நேற்று வானம் மேகமூட்டத்துடனும், சில்லென்ற தென்றல் காற்றும் வீசியவண்ணம் உள்ள‌து. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிற‌து. சீசன் அருமையாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தென்காசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலம் பஜார்களில் விற்பனையும் ஜோராக நடைபெற்று வருகிறது.

இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். குற்றாலத்தில் உள்ள பேரூராட்சி விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள படகுகுழாமிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் இரவும் பகலும் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். இதனிடையே குற்றாலம் மெயினருவியில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அனைவரும் குளித்து மகிழவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி ஒரே நேரத்தில் 50 சுற்றுலா பயணிகள் மட்டும் குளிக்கவும், அவர்கள் குளித்த பின்னர் அடுத்து 50 பேரை அனுமதிக்கவும் போலீசார் திட்டமிட்டனர். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்ப‌ட்டார்கள். இதற்காக அருவிக்கரையில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு இந்த பணிகளில் ஈடுப‌ட்டார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் அனவருமே ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். #CourtallamFalls

Tags:    

Similar News